நம்ம வீட்டு பிள்ளை – விமர்சனம் !

சிவகார்த்திக்கேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு கிராமத்து கதையில் நடித்து ரசிகர்களின் மனங்களை அள்ளியுள்ளார். பாண்டிராஜ் தனது பாணியில் புகுந்து விளையாடியுள்ளார். சிவகார்த்திக்கேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கை பாசத்தை கொடுத்து அனைவரையும் சிரிக்க ரசிக்க மட்டுமல்லாது சிலிர்க்கவும் வைத்திருக்கிறார். காமெடி வசனங்கள் கலகலப்பை ஏற்படுத்தினாலும் நம்ம வீட்டு பிள்ளை கிளைமாக்ஸ் பலரது கண்களை குளமாக்கிவிடும். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய குதூகலமான படம் என்று ரசிகர்கள் பாராட்டும் வகையில் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.

சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சூரி ஆகியோர் நடித்துள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த படம் மூலம் பாண்டிராஜின் மகன் மாஸ்டர் அன்புக்கரசு பல கவுண்டர் டயலாக் சொல்லி காமெடி சுட்டி பையனாக கலக்கியுள்ளார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ்ஸான க்ளாஸ்ஸான சிவகார்த்திகேயனின் சிறந்த படம். அனு இம்மானுவேல் கொஞ்சுவதிலும் கெஞ்சுவதிலும் அழகோ அழகு.

அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக பொருந்தியுள்ளது. சமுத்திரகனி மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகிய இருவருமே கனகச்சிதமாக பொருந்தி உள்ளார்கள். அவர்கள் வரும் காட்சிகள் கொஞ்சமாக இருந்தாலும், அவர்கள் உடல் அமைப்புக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்கள் அமைந்தது படத்திற்கு கூடுதல் பிளஸ். பாண்டிராஜ் காமெடி வசனங்களை அருமையாக கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சூரியின் காமெடி ஒர்க் அவுட் ஆகியுள்ளது.பிரசவ வலியால் பெண் அழும்போது, காரை நிறுத்து… வெள்ளரிக்கா சாப்பிட்டு போலாம் என்று காமெடியாக சொல்லும் பொது ஒட்டுமொத்த ஆடியன்ஸ் மத்தியில் குபீர் சிரிப்பு. குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாட வேண்டிய படம் நம்ம வீட்டுப் பிள்ளை. சீமராஜா, மிஸ்டர்.லோக்கல் போன்ற படங்களை விட சிறப்பாக உள்ளது என்று பலரும் இடைவேளையின் போது பேசிக்கொள்கின்றனர். இதுவே சிவகார்த்திகேயனுக்கு உற்சாக டானிக். அவருக்கு ஒரு கம்பேக் படம்.

சொந்தம் மாதிரி சந்தோஷப்படுத்துறதும் யாரும் கிடையாது… சொந்தம் மாதிரி கஷ்டப்படுத்துறதும் யாரும் கிடையாது என்று சிவகார்த்திக்கேயன் பேசுவது டச்சிங். ஓவர் பில்ட் அப் செய்யும் காட்சிகள் இல்லாதது, இந்த படத்துக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை பெற்று தருகிறது.தமிழ் சினிமாவில் தங்கச்சி பாசத்தை வைத்து படம் எடுப்பது என்பதை நிறைய இயக்குநர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ள உள்ள நிலையில், சரியான அளவுகோல் வைத்து அற்புதமாக செண்டிமெண்ட் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார் பாண்டிராஜ்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவை சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக்கி, அவர் குரலிலே சிவகார்த்திகேயன் ஆங்காகே மிமிக்கிரி செய்வது, சூப்பரான சிரிப்பு சத்தத்தை கேட்க வைக்கிறது. சரியான படத்தை சிறப்பாக மார்க்கெட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம். எமோஷன், காமெடி, ரொமான்ஸ் என்று அனைத்து இடத்திலும், தனது மெனக்கெடலை நன்றாக செய்துள்ளார் சிவகார்த்திகேயன். கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து நிச்சயம் அழுகை வரும் என்று சொல்லாவிட்டாலும் கண்டிப்பாக உணர்ச்சிபூர்வமாக இருக்கும். யோகிபாபு என்ட்ரி அண்ட் எக்ஸிட் படத்தில் சரியான இடங்களில் பயன்படுத்தபட்டு இருக்கிறது.

டி.இமான் இந்த படத்துக்கு கொடுத்த காதல் பாடல்களை விட தங்கச்சி பாசத்திற்கான பாடல் நீண்ட நாட்கள் மனதில் நிற்கும். கமர்சியல் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவு, தொய்வு ஏற்படாத எடிட்டிங் இவை அனைத்தும் பி & சி ஆடியன்ஸை மிகவும் ரசிக்க வைக்கும் அம்சங்கள். மாங்கனியாக வரும் அணு இம்மானுவல் சிவகார்த்திகேயனுடன் செல்போனில் பேசி அது கான்ஃபரென்ஸ் காலாக மாறும் போது ஏற்படும் நகைச்சுவை ரொம்ப ஸ்வீட்.கிராமிய கதாபாத்திரங்களுக்கு என்றே பலரை தேர்ந்தெடுத்து, மாமா, மச்சான், சித்தி, சித்தப்பா என்று ஒரு பெரிய கூட்டத்தை உருவாக்கி, மனித உறவுகளின் சராசரி பிடிவாதம், கோபம், போன்ற சிக்கல்களை மிக எதார்த்தமாக கையாண்டுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். ஃபீல் குட் ஃபேமிலியாக காட்டுவதால், பி & சி ஆடியன்ஸ் கண்டிப்பாக மீண்டும் மீண்டும் பார்க்க வருவார்கள் என்பது உறுதி. அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் செய்தும் காட்டி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.