நகர்ப்புறங்களில் படித்த பெண்கள் 8.7 % பேருக்கு வேலையில்லை ?

நாடு முழுவதும் வேலையில்லாத பெண்களின் எண்ணிக்கை ஆண்களை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.இந்தியாவில் பணி அமர்த்தலில் பாலின சேர்க்கை என்ற தலைப்பில் ஹார்வர்டு பல்கலை மாணவர்களான ரேச்சல் லெவன்சன் மற்றும் லயலா ஓகேன் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: நகர்ப் புறங்களில் படித்த பெண்களில் 8.7 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். அதே நேரத்தில் ஆண்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக உள்ளது. வேலை தேடுவதில் பெண்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ள போதிலும் பாலின இடைவெளியும், உயர்கல்வி கற்ற பெண்கள் ஆண்களுடன் போட்டி போடும் போது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. கல்வி தகுதி, அனுபவம், ஆட்தேர்வு, விண்ணப்ப தேர்வு, விண்ணப்ப நடைமுறை ஆகியவற்றில் பெண்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

பெண்கள் தங்களுக்கு கல்வி மற்றும் அனுபவம் அதிகளவில் இருந்த போதிலும் பாலின வேறுபாடால் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பெண்களை அதிகளவில் வேலை அமர்த்தும் பட்சத்தில் அவர்களால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 27 சதவீதம் அதிகரிக்கும். நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அளிப்பதில் பாலின வேறுபாட்டை குறைத்து உள்ளதில் பெரும் பங்கை வகிக்கின்றன. வேலை வாய்ப்பில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்து இருப்பது மற்றும் மேம்படுத்துவதில் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆய்வாளர்கள் இருவரும் கடந்த 2016-17 ஆண்டில் வேலை வாய்ப்பு வழங்கும் 200 பணிகளை அடிப்படையாக கொண்டு வேலைவாய்புக்கான தளத்தை உருவாக்கினர். இவற்றில் 2,86,991 பேர் விண்ணப்பித்தனர்.இதில் 2,11,004 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பித்திருந்தாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். இதனிடையே ஷார்ட்லிஸ்ட்டின் இணை நிறுவனர் சமைன் டெஸ்ஜார்டின்ஸ் கூறுகையில் சிறிய,நடுத்தர அளவிலான வணிக நிறுவனங்கள், பெண்களின் பங்கால் சிறப்பாக செயல்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் தொழில் நுட்பத்தின் மூலம் தங்களின் பன்முகத் தன்மையை அதிகரிக்க முடியும் என்றார்.