தேங்காய், நிலக்கடலை இருந்தால் உங்கள் காலை உணவு பெஸ்ட்!

காலையில் என்ன உணவுகளை உட்கொண்டால் உற்சாகமும் வலிமையையும் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.காலை நேர உணவை தவிர்க்கவே கூடாது என்கிறது மருத்துவ உலகம். நீண்ட நேரத்துக்குப் பிறகு உண்ணும் காலை உணவு மட்டுமே அன்றைய பகல் நேரம் முழுவதும் சக்தியை அளிக்கக் கூடியது. காலை நேர உணவை தவிர்த்தால் ரத்த சோகை, அசிடிட்டி, உடல் பருமன் போன்றவை உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அதனால் காலையில் என்ன உணவுகளை உட்கொண்டால் உற்சாகமும் வலிமையையும் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

காலை நேர உணவாக முழு தானிய சிற்றுண்டிகள் இருப்பது நல்லது. ஒருநாள் கோதுமை என்றால் மறுநாள் அரிசி, கேழ்வரகு என்று மாற்றிக்கொள்வது சிறந்தது. காய்கறி அல்லது பழ சாலட் சேர்த்துக்கொள்வது உடலை உற்சாகமாக்கும். நிலக்கடலையை காலையில் சாப்பிடுவது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். பச்சை நிலக்கடலை நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஊற வைத்த கடலை, முளை கட்டிய தானியம், முட்டை, ஓட்ஸ், கேழ்வரகு கஞ்சி, சிறுதானிய கஞ்சி, சத்துமாவு கஞ்சி போன்றவையும் நல்லது. இட்லி, பொங்கல், காய்கறிகள் சேர்த்த உப்புமா, புட்டு, சப்பாத்தி போன்றவை காலை உணவுக்கு நல்லது. பழச்சாறு, காய்கறி சூப் போன்றவையும் எடுத்துக் கொள்ளலாம். வாழைப்பழம் காலை உணவுக்கு நல்லது. ஏகப்பட்ட சத்துக்களை கொண்ட தேங்காய் பால், தேங்காய் துருவல்களை காலை உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். காலை உணவில் அதிக எண்ணெய், வனஸ்பதி, நெய் போன்றவற்றை சேர்க்காதீர்கள். சேர்த்தால் அன்று முழுவதும் மந்த நிலையை உருவாக்கி விடும். மைதா காலை உணவில் வேண்டவே வேண்டாம். பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி போன்றவை சேர்த்த உணவுகள் அன்றைய நாளுக்கான சக்தியையும் உற்சாகத்தையும் அதிகமாகவே உங்களுக்குத் தரும்.