தாமிரபரணி தண்ணீர் 20 ஆண்டுகளில் நஞ்சாக மாறும் அபாயம் ? நீரியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை !!

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதும், அழுக்கு துணிகள் வீச்சும் தொடர்கதையாவதால் இன்னும் 20 ஆண்டுகளில் நீரை பயன்படுத்த முடியாத நஞ்சாக மாறும் வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வற்றாத ஜீவநதியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந்து வளம்கொழிக்கும் தாமிரபரணி புண்ணிய நதிகளில் முதன்மையானதாகத் திகழ்கிறது. நதிநீர் பயன்பாட்டுக்காக அண்டை மாநிலங்களின் தயவை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லாதது, அனைவரது பாவங்களையும் தானே சுமந்து போக்கும் கங்கையே, தன்பாவம் நீங்க இங்கு புனித நீராடி செல்வது உள்ளிட்ட பல்வேறு புராண சிறப்புகள் தாமிரபரணியை சாரும்.நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த பொதிகை மலையில் உற்பத்தியாகி சுமார் 120 கி.மீ. தொலைவு பாய்ந்து பல லட்சக்கணக்கான விளை நிலங்களை வளப்படுத்தி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. பல்லாண்டுகளாக பரந்து விரிந்து பாய்ந்த நதி, முறையான பராமரிப்பின்றியும், இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகளாலும் காலப்போக்கில் சுருங்கிக் கொண்டே வருகிறது.

தாமிரபரணி சமதளத்தை தொடும் பாபநாசத்தில் துவங்கி புன்னக்காயல் வரையிலும் பல இடங்களில் தொழிற்சாலைகளின் கழிவும், குடியிருப்புகளின் கழிவுநீரும் ஓடைகள் வழியாக நேரிடையாக ஆற்றில் கலந்து பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதவிர நதி முழுவதும் அமலைச் செடிகளும், சீமை கருவேல மரங்களும், பிளாஸ்டிக் கழிவுகளும் ஆக்கிரமித்துள்ளன.இதனால் இந்நதியில் பல இடங்களில் குளிப்பவர்களுக்கு தோல் வியாதிகளும், நீரை காய்ச்சாமல் குடிப்பவர்களுக்கு உணவுக் குழாயில் அலர்ஜி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளும் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதவிர பல இடங்களில் விழிப்புணர்வின்றி ஒரு சிலரால் அழுக்கு படிந்த துணிகளும், குப்பைகளும் நதியில் கொட்டப்பட்டு வருகின்றன.தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்கு பின்பு கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை மகாபுஷ்கரணி விழா நடத்தப்பட்டது.

இதனால் பாபநாசம் முதல் புன்னகாயல் வரை பல இடங்களில் ஆற்றின் கரையோரங்கள் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரால் சுத்தப்படுத்தப்பட்டது. இதனால் ஒரு மாதம் வரை சுத்தமாக பராமரிக்கப்பட்ட தாமிரபரணி ஆறு கழிவு நீராலும், ஆற்றில் வீசப்படும் குப்பைகளாலும், பழைய துணிகளாலும் மீண்டும் பாழ்பட்டு வருகிறது. பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பினரின் அக்கறையின்மையால் கழிவுநீர் நேரடியாக தாமிபரணி ஆற்றில் இணைகிறது. மேலும் கனரக வாகனங்கள், கால்நடைகளையும் ஆற்றில் இறக்கி சுத்தப்படுத்துகின்றனர். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த சுத்தம் தற்போது நதியில் இல்லை என நீரியல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றுக்குடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் நஞ்சாக மாறும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் கண்ணுக்கு முன்னே தாமிரபரணி நதி மாசுபடுவது குறித்து பாளை சதக்கத்துல்லா கல்லூரி வேதியியல் துறை பேராசிரியரும், நிலத்தடிநீர் குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருபவருமான கமாலுதீன் கூறுகையில், ‘‘பொதுவாக ஒவ்வொரு நதியிலும் இயற்கையாக நுண்ணுயிரிகள் நிறைந்து காணப்படும்.

இதே போல் தாமிரபரணியிலும் வரப்பிரசாதமாக உள்ள உயிரிகள், ஆற்றில் சேரும் குப்பைகள், கழிவுகளால் ஆறு மாசுபடுவதை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததோடு கால்நடைகள் மற்றும் ஒரு சில விலங்குகளின் கழிவுகளும், சாக்கடை மற்றும் மனிதகழிவுகளும் அதிக அளவில் ஆண்டுக்கு ஆண்டு கலப்பதால் நதியின் பாதுகாப்பு படையாகத் திகழும் நுண்ணுயிரிகள் அழியும். பின்னர் படிப்படியாக தாமிரபரணி தண்ணீரே நஞ்சாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20 ஆண்டுகளில் நதியின் நிலை எப்படியிருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது’ என்றார்.

Related posts:

வங்கிகளில் ரூ.2,000 கோடி கடன் வாங்க மின்வாரியம் முடிவு ?
இந்தியாவுக்கு பினாங்கு ரோட்ஷோ 2020 !
அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !
ரகுபதி ராகவ ராஜாராம் # வயலின் வித்துவான் # டி.எஸ்.கிருஷ்ணா # இன்னிசை
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யப்படும் கல்லறைகள் ?
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் தமிழ்நாடு கிராம வங்கியுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !
உத்தர பிரதேச காவல்துறை வன்முறை ! அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பொது நல மனு தாக்கல்!