தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக சுனில்குமார் ஐபிஎஸ்

கூடுதல் இயக்குனர் அந்தஸ்தில் இருந்த சுனில்குமார் ஐபிஎஸ் அண்மையில் ஓய்வுப் பெற்றார். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையக் குழு உறுப்பினராக அவரை தமிழக அரசு நியமித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு திமுக சார்பில் சாலை மறியல் நடைபெற்ற போது, காவல்துறையினரால் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிந்தாரிப்பேட்டை திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்களை பார்ப்பதற்காக அப்போதைய திமுக இளைஞரணிச் செயலாளர் மு.க.ஸ்டாலின் திருமண மண்டபத்திற்குச் சென்றார். அந்தநேரத்தில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரியான இதே சுனில்குமார் ஐபிஎஸ், மு.க.ஸ்டாலினை அனுமதிக்கவில்லை. அப்போது நியாயம் கேட்டு, மண்டபத்திற்குள் நுழைய முயன்ற மு.க.ஸ்டாலினை நெஞ்சில் கைது தள்ளிவிட்டவரும் இதே சுனில்குமார் ஐபிஎஸ். அந்த நிகழ்வின் படம் மறுநாள் நாளிதழ் ஒன்றில் வந்தது. அப்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் அப்போது எதிரொலித்தது. நாளிதழில் வெளியான புகைப்படத்தை பேரவையில் காட்டி, போலீஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த மு.க.ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ., ஒருவர் ( சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்) ஆவேசமாக பேசினார். அதனை கேட்ட அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா, ஐபிஎஸ் அதிகாரி சுனில்குமாரிடம் இதுதொடர்பாக புகார் பெற்று, வழக்குப்பதிவு செய்து மு.க.ஸ்டாலினை கைது செய்யும்படி காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சுனில்குமார் ஐபிஎஸ்.ஸை அணுகி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால், அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை என்று கூறி மு.க.ஸ்டாலினுக்கு எதிராக புகார் தர மறுத்துவிட்டார். அதனாலேயே, அதிமுக ஆட்சி முடியும் வரை சுனில்குமார் ஐபிஎஸ் செல்வாக்கு இல்லாத துறையிலேயே காலத்தை கழிக்க நேர்ந்தது. காவல்துறை பணியில் அரசியலை கலக்காமல் கண்ணியம் காத்த சுனில்குமார் ஐபிஎஸ்.ஸுக்கு இன்றைக்கு ஓய்வுக்குப் பிறகும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மரியாதைக்குரிய பதவியை வழங்கி அழகுப் பார்த்திருக்கிறார். ஆனால், அன்றைக்கு மு.க.ஸ்டாலினை கைது செய்து சிறையில் அடைக்கும் வேண்டும் என்று சட்டசபையில் ஆவேசமாக முழக்கிய அப்போதைய அதிமுக எம்.எல்.ஏ., இன்றைக்கு திமுக ஆட்சியில் அமைச்சராக இருப்பதும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனதுக்கு நெருக்கமானவராக மாறியிருப்பதும்தான் காலத்தின் விசித்திரம். அரசியலில் இதெல்லாம் சாதாரணம்ப்பா…