ஜிஎஸ்டி ரிட்டர்னை 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் தயார் தடை ? மத்திய அரசு திட்டம் !

ஜிஎஸ்டி ரிட்டர்னை ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் தாக்கல் செய்யாவிட்டால், அவர் இ-வே பில் தயார் செய்வதில் இருந்து தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக ஜிஎஸ்டிஎன் தனது வலைதளத்தில் புதிய அம்சத்தைச் சேர்க்கும் பணிகளைச் செய்து வருகிறது. இதன்படி 6 மாதங்களாக ஒருவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாவிட்டால், தானாகவே இ-வே பில் உருவாக்கத்தில் இருந்து அவர் தடை செய்யப்படுவார்.

1இது குறித்து ஜிஎஸ்டி வரி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ நாங்கள் உருவாக்கும் புதிய முறை மூலம் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யத் தகுதியுடைய ஒருவர், தொடர்ந்து இரு சுற்றுகள்(இரு 3 மாதங்கள்) ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யாமல் இருந்தால், அவர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் இ-வே பில் உருவாக்குவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள். இதன் மூலம், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வதும் தடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்து 626 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.15 278 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இ-வே பில் முறை என்பது கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மதிப்புப்புள்ள பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கோ அல்லது மற்றொரு இடத்துக்கோ கொண்டு சென்றால் இ-வே பில் உருவாக்கிப் பதிவு செய்வது கட்டாயமாகும். ஜிஎஸ்டி ஆய்வாளர் சோதனையின் போது இ-வே பில் காட்டுவது அவசியமாகும்.மேலும் இ-வே பில் முறையையும், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் பாஸ்ட் டாக் முறையையும் இணைக்கவும் வருவாய் துறை முயற்சிகள் செய்து வருகிறது. இதன் மூலம் சுங்கச்சாலையை கடந்து செல்லும் சரக்கு வாகனங்களில் இ-வே பில் இருக்கிறதா என்பதை பாஸ்ட் டாக் மூலம் கண்டறிய முடியும்.