சொத்து வாங்குபவர்கள் கவனியுங்கள்!

ஒரு முன்னோட்டம்
அவிநாசி பாபு என்பவரிடமிருந்து ஆனந்த் என்பவர், கட்டடம் / காலி மனை போன்று ஒரு சொத்து வாங்க விரும்புகிறார். அதன் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இந்திய வருமான வரிச்சட்டப்படி, அசையா சொத்து விற்கும்போது மூலதன லாப வரி செலுத்துவதற்கு அவிநாசி பாபுதான் பொறுப்பாகிறார். ஆனால் சொத்தை வாங்கும் ஆனந்த் பணத்தை கொடுக்கும் போது அதற்குரிய வரி பிடித்தம் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்.பின்னர் அந்த தொகையை பாபு பெயரில் வருமான வரியாக செலுத்த வேண்டும். பாபு தனது ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது அதை கழித்துக்கொள்ளலாம். அசையா சொத்துக்கள் வாங்கும்போது பின்பற்றவேண்டிய வரி நடைமுறைகள் இவ்வளவு சிம்பிள்தாங்க.

இனி வரி விவரங்களை பார்ப்போம்;

‘கருப்பு’ தடுக்க வரிப்பிடித்தம்

இந்தியாவில் நடக்கும் கருப்பு பணப்புழக்கத்தில் கணிசமான தொகை அசையாச் சொத்து பரிவர்த்தனைகளில் நடைபெறுவதாக நம்பப்படுகிறது. வருமான வரித்துறை கருப்பு பணத்தின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை சமீபகாலமாக நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கிறது.

விவசாய நிலம் வரி பிடித்தம் இல்லை

இந்திய வருமானவரி சட்டம் பிரிவு 194-IAன் படி, அசையா சொத்தின் மதிப்பு 50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால், சொத்து வாங்குபவர், விற்பவருக்கு பணம் செலுத்தும்போது, வாங்கும் விலை மதிப்பில் ஒரு சதவீதம் வரி பிடித்தம் செய்து அரசிடம் செலுத்தவேண்டும். இந்த வரி, குடியிருப்பு சொத்து, வணிக சொத்து மற்றும் நிலங்களுக்கும் பொருந்தும். இந்த வரியில் இருந்து விவசாய நிலம் வாங்குவதற்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், ரூ. 50 லட்சம் மதிப்பிற்கும் குறைவாக அசையா சொத்து வாங்கினால் வரிப் பிடித்தம் (TDS) தேவையில்லை.

எப்ப பிடிக்கணும்எப்படி செலுத்தணும்

இந்த வரி, ஆவணம் பெயர் மாற்றப்படும் போதோ அல்லது ஆவண மாற்றத்துக்கு முன் அட்வான்ஸ் வழங்கும்போதோ சொத்து வாங்குபவர், சொத்துக்கான விற்பனையாளருக்கு பணம் செலுத்தும்போது, விற்பனை மதிப்பில் ஒரு சதவீதம் வரிப்பிடித்தம் கழித்துக்கொண்டு மீத தொகையை மட்டும் செலுத்துவது அவசியம்.வரி பிடிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் இந்த வரிப்பணத்தை, சொத்து வாங்குபவர், மத்திய அரசின் வங்கி கணக்குக்கு செலுத்த வேண்டும். டிடிஎஸ் செலுத்த மற்றும் பிற விவரங்களை அளிக்க சலான் உள்ளடக்கிய 26QB படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஒரு வேளை ஒன்றுக்கு மேற்பட்ட வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் இருந்தால் அதற்கு ஏற்றவாறு தனித்தனியாக, முறையாக 26QB படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.பொதுவாக, டிடிஎஸ் கழிக்க பொறுப்புள்ள ஒவ்வொருவரும் ஒரு TAN (வரி விலக்கு கணக்கு எண்) பெற வேண்டும். இருப்பினும், அசையாச் சொத்து பொறுத்தவரை டிடிஎஸ் விஷயத்தில், வாங்குபவர் TAN ஐ வாங்க வேண்டியதில்லை. படிவம் 26QB இல் விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் பெயர், முகவரி, பான் (PAN), மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் விவரம் போன்றவற்றை வழங்க வேண்டும். மேலும் ஒப்பந்தத்தின் தேதி, சொத்தின் முழு மதிப்பு, பணம் செலுத்தும் தேதி, முதலியவை இணைத்து சொத்தின் முழுமையான முகவரியை வழங்க வேண்டும். ஒரு வேளை சொத்து விற்றவரால் நிரந்தர வங்கி கணக்கு எண் வழங்கப்படவில்லை என்றால் ஆதாரப் பணத்திலிருந்து வரி பிடித்தம் 20 சதவீதம் கழிக்கப்படும்.அசையா சொத்து வாங்குபவர், வரி பிடித்தம் செய்து, விவரங்களை தாக்கல் செய்யும்போது சொத்து விற்பவரின் விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இல்லாதபட்சத்தில் விற்பனையாளருக்கு கிடைக்கக்கூடிய வரி வரவு கிடைக்காமல் போய்விடும்.

வரி பிடிக்காமல் விற்க முடியுமா?

சொத்து விற்பவர், ‘தனது வருமானமும், மூலதன லாபமும் சேர்ந்து வருமான வரி வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்’ என்று வருமானவரி அதிகாரியிடம் பிரிவு 197 படி விண்ணப்பிக்க வேண்டும். வரி பிடித்தம் செய்யாமலோ அல்லது குறைந்த விகிதத்தில் வரி பிடித்தம் செய்யும்படியோ வருமான அதிகாரியிடம் ஒரு சான்றிதழ் பெறும் பட்சத்தில் சொத்தை வாங்குபவர் எந்தவித வரி பிடித்தம் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியும்.

வரியை எப்படி செலுத்த வேண்டும்

பிடித்தம் செய்த வரியை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ செலுத்தலாம். வங்கி மூலம் செலுத்தினால், வருமான வரித்துறை வெப்சைட்டில், வங்கி பதிவு செய்யும். டிடிஎஸ் செலுத்த பட்டதும், சொத்து வாங்குபவர், வரி செலுத்தியதற்கான அத்தாட்சியை படிவம் 16பி-ல் வருமான வரித்துறை வெப்சைட்டில் இருந்து எடுத்து சொத்து விற்றவருக்கு 15 நாட்களுக்குள் அவசியம் அளிக்க வேண்டும்..சொத்து வாங்குபவர் மற்றும் விற்பனையாளர் விற்பனையின் மீது ஏற்கனவே வரிப் பிடித்தம் செய்யப்பட்டதால் தனக்குக் கூடுதலாக வரிக் கட்டும் பொறுப்பு இல்லை என்றோ அல்லது கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றோ கருத முடியாது. மூல தனத்துக்கு ஏற்றவாறு சரியான வரியைக் கணக்கிட்டு கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு.பூமி (நிலம்) வாங்குபவர்கள், ரூ. 50 லட்சத்திற்குமேல் இருந்தால் வரிப் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். இது விவசாய பூமிக்கும் பொருந்துமா என்பதை விளக்குங்கள்.அசையாச் சொத்துக்கள், ரூ. 50 லட்சத்திற்கு அதிகமாகும் பட்சத்தில், சொத்து வாங்குவோருக்கு வருமான வரி பிடித்தம் செய்வது அவசியமாகிறது. ஆனால் விவசாய பூமி வாங்குபவர்களுக்கு, அதன் மதிப்பு எவ்வளவு இருந்தாலும் இந்த விதி பொருந்தாது. வரி பிடித்தம் செய்ய தேவையில்லை.