சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் – எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?

சென்னை மாநகராட்சியில் ரத்தாகும் ஒப்பந்தங்கள் – எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கலா?

சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களில் மட்டும் 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. `அ.தி.மு.க அரசின் கடைசி சில மாதங்களில் பல தேவையற்ற ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல் வரலாம்’ என்கின்றார்கள் மாநகராட்சி அதிகாரிகள். என்ன நடக்குது மாநகராட்சியில் ?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிர்வாகரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க அரசு கையில் எடுத்து வருது. இதில், உள்ளாட்சி, பால்வளம், போக்குவரத்து ஆகிய துறைகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துகிட்டே இருக்குது. இதுதவிர, மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை, பொதுப்பணித்துறை, சுகாதாரம் என முக்கியமான துறைகளில் நடந்த முறைகேடுகளையும் தீவிரமாக ஆய்வு செஞ்சுக்கிட்டு வர்றாங்க..

இதன் தொடர்ச்சியாக, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய ரெய்டு, அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துச்சு.இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாள்களாக நடந்து வரும் அதிரடி மாற்றங்கள், கொங்கு மண்டல அ.தி.மு.கவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால், பூங்கா பராமரிப்பு ஆகியவற்றுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறையான திட்டமிடல் இல்லாதது, ஒப்பந்த விதிகளைப் பின்பற்றாதது போன்ற காரணங்களால் 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, உலக வங்கியின் நிதி உதவியோடு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
அண்ணா நகர், ராயபுரம், அடையாறு உள்பட 43 இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் இது. இதில் சரியான திட்டமிடல் இல்லை எனக் கூறி 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுதவிர, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் 116 கோடி ரூபாய் செலவில் 1,500 சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தும் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இதுதவிர, சென்னை மாநகராட்சியின் சேவைகள், விழிப்புணர்வு வீடியோ காட்சிகளை தயார் செய்வதற்காகவும் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை கையாளும் பணிக்காக ஆண்டுக்கு 2 கோடியே 31 லட்ச ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், வேறு ஒரு சிறிய நிறுவனத்துக்கு மிகக் குறைந்த தொகைக்கு உள் டெண்டர் கொடுத்து பணிகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டது.ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியைச் செய்ய முன்வராததால் அது ரத்து செய்யப்பட்டதாக மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.தற்போது மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை குறைந்த செலவில் கையாள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

660 ஒப்பந்தங்கள் ரத்து!

இந்த சூழ்நிலையில்,கடந்த சனிக்கிழமையன்று தேர்தலுக்கு முன் இறுதி செய்யப்பட்ட 660 சாலை மேம்பாடு ஒப்பந்தங்களை ரத்து செய்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள 3,200 சாலைகளை சீரமைப்பதற்கு 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.இந்தச் சாலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு பொறியாளர் குழுவுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.
இதையடுத்து பொறியாளர் குழு அளித்த அறிக்கையில், `3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதால் அவற்றை சீரமைப்பதற்கான அவசியம் இல்லை’ எனக் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, 660 ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.என்.நேரு என்ன சொல்றாருன்னா“ சென்னை மாநகராட்சியில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.இதேபோல், தமிழ்நாடு முழுவதும் டெண்டரில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். துறைவாரியாக என்னென்ன புகார்கள் வந்துள்ளன என்பதைப் பற்றி வெளிப்படையாகக் கூற முடியாது.அப்படிக் கூறினால், அவர்கள் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்குது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்போது வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும்” என்றார்.

ஒப்பந்தங்களை ரத்து செய்ததற்கு பிறகு வேறு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்? என ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருத்தர் என்ன சொல்றாருன்னா ?

“ சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அப்போதைய அரசு அவசரம், அவசரமாக ஒப்பந்தங்களை போட்டாங்க. அந்த மாதிரி சில ஒப்பந்தங்களை ரத்து செய்யும்போது, `இந்தப் பகுதிகளில் புதிதாக சாலை போட வேண்டிய அவசியம் இல்லை’ எனக் கூறியுள்ளனர். அப்படியானால், தேவையில்லாத காரணத்தால் சாலை ஒப்பந்தம் கோரியுள்ளதை காரணமாக வைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.அதேநேரம், டெண்டர் நடைமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறார்களா எனப் பார்த்தால் தி.மு.க, அ.தி.மு.க என இருவருக்குமே சிக்கல்கள் வரும். இரு தரப்புமே ஒப்பந்த விதிகளை சரியாகக் கடைப்பிடிப்பதில்லை” என்கிறார்.தொடர்ந்து பேசியவர், “ தேர்தலுக்கு முன்னதாக, அவசர கோலத்தில் டெண்டர் கொடுக்கக் கூடாது என்பது மரபு. அந்த மரபை மீறி செய்திருப்பதால் காரணங்களை ஆராய்ந்த பிறகு முடிவு செய்வோம் எனக் கூறி ஒப்பந்தங்களை ரத்து செய்யலாம்.அடுத்ததாக, டெண்டர் யாருக்காக எடுக்கப்பட்டதோ அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம். அரசாங்கத்தில் ஒரு ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு ஏராளமான காரணங்களை வகைப்படுத்த முடியும்.அதேநேரம், எந்தக் காரணமும் இல்லாமல் ஒப்பந்தங்களை ரத்து செய்ய முடியாது. அரசாங்கம், சரியான காரணத்தைக் கூறினால் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்.

மேலும், இந்த விவகாரத்தை சரியான முறையில் நிரூபிக்க முடிந்தால், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் மீது நிச்சயமாக எடுக்க முடியும். அதாவது, `ஒவ்வொரு சாலைக்கும் குறிப்பிட்ட ஆயுட்காலம் இருக்கும்.அது முடிவதற்கு முன்னர், அந்த சாலைக்கு மறுபடியும் டெண்டர் கொடுக்கக் கூடாது, ஆனால் கொடுத்திருக்கிறார்கள்’ என்ற காரணத்தைக் கூறலாம்.
இது குற்றத்துக்குள் வரும். அரசுக்கு இழப்பு ஏற்பட்டதையும் சரியான முறையில் நிரூபிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஷோகாஸ் நோட்டீஸ் கொடுக்கலாம். தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். இதில், ஒரு சிலர் மீது வழக்குகள் போடுவதால் மற்றவர்களுக்கும் எச்சரிக்கையும் கொடுக்க முடியும்” என்கிறார்.இதையடுத்து, ஒப்பந்தங்கள் ரத்து தொடர்பாக, அ.தி.மு.க மூத்த நிர்வாகி என்ன சொல்றாருன்னா

“ தி.மு.கவால் அ.தி.மு.கவின் பணிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. சகிப்புத் தன்மையும் சகோதரத்துவ மனப்பான்மையும் ஆளும்கட்சிக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள்.அதனை முற்றாக இழந்துவிட்ட தி.மு.க என்கின்ற வண்டி, தற்போது தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறையை அள்ளி வீசப் பார்க்கிறார்கள்.
அ.தி.மு.க மீது அச்சுறுத்தல்களை ஏவிவிட்டால் அதன்மூலம் அ.தி.மு.க சிதறுண்டு போகாதா என்கிற கணக்கை போட்டுப் பார்க்கிறார்கள். அது தப்புக் கணக்காகத்தான் போய் முடியும்” என்கிறார்.மேலும், “ ஒப்பந்தங்கள் எல்லாம் முறையாக இ-டெண்டர் விடப்பட்டுத்தான் இறுதி செய்யப்படுகிறது. முறையான தகுதி பெற்றவர்கள் தான் அந்த ஒப்பந்தங்களைப் பெற முடியும். ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதற்காகவே டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

`எங்களை வந்து பாருங்கள்’ எனப் பல ஒப்பந்ததாரர்களை தி.மு.க தரப்பில் இருந்து அழைத்ததாக பல்வேறு புகார்கள் வருகின்றன. `எங்கள் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது’ எனக் கூறினால் அந்த ஒப்பந்தங்களை ரத்து செய்கிறார்கள். ஒப்பந்தப் பணிகளை முடக்குவதற்காகவே இதுபோல தி.மு.க செய்கிறது” என்கிறார்.“

கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை அமைப்பதற்காக பிப்ரவரி மாதத்தில் டெண்டர் அறிவித்து பணிகளை ஒதுக்கினர். இந்த ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, கழிவுநீர் குழாய் இணைப்புக்காக ரசீதே கொடுக்காமல் மக்களிடம் வசூல் செய்தனர்.இதற்கான இணைப்புக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்டனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். இதனையெல்லாம் ஆராய்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்.தொடர்ந்து பேசியவர், “ கடந்த ஆட்சியில் வரி வருவாய்க்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லை என்பது வேதனையான விஷயம்.
அம்பத்தூரைச் சேர்ந்த ஒரு நபரின் வீட்டுக்கு கழிவுநீர் குழாய் இணைப்பு பெறுவதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் தொகையை நிர்ணயித்தனர்.`கொரோனா காலம் என்பதால் இந்தப் பணத்தைச் செலுத்துவதற்கு 3 தவணையாக அவகாசம் கொடுங்கள்’ என அந்த நபர் கேட்டார். இதனை ஏற்றுக் கொண்டு செய்திருந்தால் அரசுக்கு வருவாயும் வந்திருக்கும். அவ்வாறு செய்யாமல் அவரை துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.தற்போது ஒப்பந்தங்களையெல்லாம் ரத்து செய்வதை பழிவாங்கும் நடவடிக்கை என்பதாகப் பார்க்கக் கூடாது. சாலைகள் இன்னமும் மோசமான நிலையில்தான் உள்ளன. விரிவாக்கப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளின் நிலைமை இன்னமும் மோசமாக உள்ளது.கழிவுநீர் குழாய் தண்ணீரை எங்கே கொண்டு போய்விட வேண்டும் என்றே தெரியாமல் வசூல் மட்டுமே செய்துவிட்டனர். இனி வரும் நாள்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே அச்சம் வர வேண்டும். அப்போதுதான் பணிகள் சீராக நடக்கும்” என்கிறார்.

“ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக சொல்கிறார்களேங்கிற கேள்விக்கு என்ன சொல்றார்னா“ இது முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டு. எல்.இ.டி விளக்கு வாங்கியதில் என்னென்ன நடந்தது, முறையாக செப்பனிடாத சாலைகள் என ஏராளமான முறைகேடுகள் நடந்தன.

ஒப்பந்ததாரர்களை அரசு மிரட்டுவதாக இருந்தால், நீதிமன்றம் செல்லட்டுமே, அவர்களை யார் தடுக்கப் போகிறார்கள்? தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மீதுதான் புகார்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில ஆட்களுக்குத்தான் அவர்கள் ஒப்பந்தங்களை கொடுத்துள்ளனர்.

இவர்கள் ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் சென்னையில் எங்களுக்கு ஏன் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்? திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரையில் அ.தி.மு.கவை மக்கள் நிராகரித்துவிட்டார்கள். எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார்கள்” என்றார்.திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்வதும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தங்களை ரத்து செய்றதும் வழக்கமா நடக்கிறது தான். சென்னை மாநகராட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்திருக்குன்னு நிரூபித்தால் முன்னாள் அதிமுக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சிக்கல் தான்.என்ன நடக்கப் போகுதுங்கிறத பாக்கத்தானே போறோம்.