முதல் முறையாக சென்னையின் கலை படைப்பாளிகளுக்காக பாப்-அப் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது யூ-டியூப்.. !

தமிழ் உள்பட மாநில மொழிகளில் கலை அம்சமிக்க விடியோக்களை உருவாக்குவோருக்காக யூ-டியூப் தொடர்ந்து தனது ஆதரவுக்கரத்தை நீட்டி வருகிறது. இதற்காக முதலீடுகளையும் செய்கிறது. இதன்படி, சென்னையில் முதல் முறையாக யூ-டியூப் பாப்-அப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, யூ-டியூப் சேனல்கள் வைத்துள்ளவர்கள் யூ-டியூப்பின் தயாரிப்புக் கருவிகள், தயாரிப்பு உபகரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அசல் மற்றும் தரமான விடியோக்களை தயாரிக்கலாம். யூ-டியூப் சேனல்கள் வைத்துள்ள தொடக்க நிலை பயன்பாட்டாளர்கள் சுமார் 400 பேருக்கு வாய்ப்பைத் தரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சென்னையில் யூ-டியூப்பின் களமானது மூன்று வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மியூசிக் செட்-அப், உணவு வகைகளுக்கான ஸ்டூடியோ, லைஃப் ஸ்டைல் செட் என மூன்று வகையான செட்கள் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மூன்று நாள் பயிலரங்கில் பல கலைஞர்கள் பங்கேற்று எப்படி விடியோ வடிவில் கதை சொல்வது, விடியோக்களின் கருக்களை தேர்வு செய்வது, தயாரிப்பு மற்றும் அதனை விளம்பரப்படுத்துவது போன்ற விஷயங்களை கேட்டறிந்தனர்.

இதுகுறித்து, யூ-டியூப் இந்தியா நிறுவனத்தின் மூலக்கரு பிரிவின் இயக்குநர் சத்யா ராகவன் கூறியதாவது:-
தமிழகத்தில் பலதரப்பட்ட அம்சங்களுடன் விதவிதமான அதேசமயம் ஆழமான விஷயங்கள் பதிவிடப்படுவதைப் பார்க்கிறோம். 2018-ஆம் ஆண்டில் 1 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட யூ-டியூப் சேனல்தாரர்கள் 30 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், ஒரே ஆண்டுக்கும் குறைவான காலத்தில் 94 சேனல்தாரர்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதரர்களைக் கொண்டுள்ளனர். விஜய் தொலைக்காட்சியானது 10 மில்லியன் சாந்தாதாரர்களைக் கொண்டு முதலிடம் வகிக்கிறது. இத்துடன் யூ-டியூப் சேனல்கள் உள்பட 1,344 தமிழ் சேனல்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சந்தாரர்களைக் கொண்டிருக்கின்றன. இத்துடன் பாப்-அப், நெக்ஸ்ட்-அப் போன்ற அம்சங்களை கலைப் படைப்பாளிகளுக்காக யூ-டியூப் ஏற்படுத்தித் தருகிறது. கலைப் படைப்பாளர்களின் வளர்ச்சியில் வளர்ச்சிக்காக தொடர்ந்து முதலீடுகளைச் செய்வதுடன், அதில் ஈடுபாடு உள்ளவர்கள் விடியோ கருவிகள் உள்ளிட்டவற்றை கையாள வழியை ஏற்படுத்தித் தருகிறது. இதன்மூலம் ஆர்வமுள்ள கலைப் படைப்பாளிகள் தங்களை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் ஏற்படும் என்றார்.

இந்த ஆண்டானது யூ-டியூப்பில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷின் ரெளடி பேபி பாடல் 680 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. மேலும், உலகம் முழுவதும் உள்ள பல பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் ட்ரைய்லர் காட்சியை 2.3 மில்லியன் பேர் விரும்பியதுடன், 45 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். விகடன் தொலைக்காட்சியில் நாயகி தொடரை ஒவ்வொரு நாளும் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிமானோர் பார்த்து வருகின்றனர்.இந்த ஆண்டில் யூ-டியூப்பில் பல புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. யூ-டெக் தமிழ், தமிழ் கேமிங், மின் புட்கி, வில்லேஜ் குக்கிங் சேனல் என புதிய முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் 325 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். யூ-டியூப்பில் அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்தவர்கள் மக்களை அதிகம் கவரும் ஊடகங்களுக்கும் சென்றுள்ளனர். குறிப்பாக யூ-டியூப்பில் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் சேனல்களில் ஒன்றான வில்லேஜ் புட் பேக்டரியின் டாடி ஆறுமுகம், சன் லைப் தொலைக்காட்சியில் தனியாக நிகழ்ச்சியை செய்து வருகிறார்.

இந்தியாவில் யூ-டியூப் பாப்-அப்:இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,400-க்கும் அதிகமான படைப்பாளர்கள் யூ-டிப்பில் கால் பதித்துள்ளனர். பிலிவ் டிஜிட்டல், டைம்ஸ் மியூசிக், சரிகம, சோனி மியூசிக், கார்டன் அப், குட்னஸ் இன் யூ, கிரி பக்தி, ப்ளாக் ஷி என பல்வேறு யூ-டியூப் சேனல்களுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். யூ-டியூப் பாப்-அப் நிகழ்வில் பல யூ-டியூப் சேனல்தாரர்கள் பங்கேற்று 75-க்கும் மேற்பட்ட விடியோக்களை பதிவு செய்துள்ளனர். இந்த பாப்-அப் நிகழ்வானது தொடக்க நிலையில் உள்ள கலைப்படைப்பாளர்கள், நன்கு மக்களிடம் சென்றடைந்துள்ள யூ-டியூப் சேனல்களை வைத்துள்ள கலைப் படைப்பாளர்களுடன் கலந்து உரையாடி தொடக்க நிலையில் இருப்போரும் உயர்ந்த நிலையை அடைய வழிவகுத்துக் கொடுக்கிறது.