சென்னையின் நிலத்தடி நீர் குறையத் தொடங்கியது.! 2020-ல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?

வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ள நிலையில் சென்னையின் பல இடங்களில் கடந்த நவம்பர் மாதத்தை விட டிசம்பர் மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது மெட்ரோ குடிநீர் வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னை சந்தித்த தண்ணீர் பஞ்சத்திற்கு பிறகு, மழைநீர் சேமிப்பில் தீவிர நடவடிக்கைகள் எடுத்தது அரசு.

இதன் விளைவாக கடந்த சில மாதங்களாக சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்த நிலையில், தற்போது சென்னையின் பல முக்கிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெட்ரோ குடிநீர் வாரியம் இம்மாதம் நடத்திய ஆய்வில், திருவெற்றியூர், மாதவரம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும், சோழிங்கநல்லூர், அடையாறு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் 1 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.வடகிழக்கு பருவமழை சென்னையில் இயல்பை விட 19 சதவிகிதம் குறைவாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னையின் நீராதாரமாக உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,257 மில்லியன் கன அடியில் தற்போது 5,706 மில்லியன் கன அடி மட்டுமே உள்ளது.

2019 ஆண்டு கோடைக் காலத்தில் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி சென்னை சந்தித்த அவலம், இவ்வாண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், கால தாமதம் செய்யாமல் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.