சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் ஏசி !

வளரும் நாடுகளில் கூட, நடுத்தர குடும்பங்கள் வேக்காட்டிலிருந்து தப்பிக்க, ‘ஏசி’ வாங்கி மாட்டுகின்றனர். இந்த நிலையில், அவை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்று தடுக்க முடியாது.
எனவே, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, எளிய குளிர்ச்சி தரும் சாதனங்களை உருவாக்க, 2018 நவம்பரில், வர்ஜின் குழும தலைவர் ரிச்சர்ட் ‘உலக குளிர்ச்சிப் பரிசு’ ஒன்றை அறிவித்தார். 21.35 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பரிசுப் போட்டிக்கு இன்னும் கெடு முடியவில்லை.

அதற்கு சரியான போட்டியாளராக ‘சவுண்ட் எனர்ஜி’ தயாரித்துள்ள ‘தியாக்-25’ என்ற, ‘ஏசி’ கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பேண்டு வாத்தியக் கருவி போலத் தெரியும் தியாக், ‘ஏசி’ வெப்பத்தை ஒலியாக மாற்றி, பின், அந்த ஒலி ஆற்றலை குளிர் ஆற்றலாக மாற்றும் ‘தெர்மோ அக்குஸ்டிக்’ தொழில் நுட்பத்தைக் கொண்டது.

தொழிற்சாலைகளில் உள்ள அனல் கக்கும் பெரிய இயந்திரங்களில் வெளிப்படும் வெப்பத்தை உள்வாங்கி, காற்றையோ, தண்ணீரையோ குளிர்விக்க முடியும் என்கிறது, சவுண்ட் எனர்ஜி.
தற்போது சவுண்ட் எனர்ஜி தயாரித்துள்ள, 25 கி.வா., சக்தி கொண்ட தியாக் -25 இயந்திரத்தால், -25 டிகிரி சென்டிகிரேடு குளிர்ச்சியை உருவாக்க முடியும். இந்தக் கருவியில் அசையும் பாகங்களோ, தற்போதைய, ‘ஏசி’க்களில் இருக்கும் வேதி திரவம் அல்லது வாயுவோ எதுவும் இல்லை என்கின்றனர் சவுண்ட் எனர்ஜியின் வடிவமைப்பாளர்கள்.

இதில் ஆர்கான் என்ற சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வாயுவை மட்டுமே பயன்படுத்துவதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போதைக்கு பெரிய ஆலைகள், கட்டடங்களுக்கு மட்டுமே இதை பொருத்த முடியும். ஆனால், சூரிய வெப்பத்தின் மூலம் இயங்கும் தியாக், ‘ஏசி’க்களை விரைவில் அறிமுகப்படுத்தப் போவதாக, சவுண்ட் எனர்ஜி அறிவித்துள்ளது. அப்போது, குற்றஉணர்ச்சியின்றி எவரும் வீட்டிலேயே, ‘ஏசி’ வாங்கி மாட்டலாம்.