கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் !

கடந்த 1978ம் ஆண்டு தமிழில் வெளியான படம் பைரவி. கலைஞானம் தாயரித்த இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், தனி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தயாரித்தது மட்டுமின்றி, கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார்.

70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகும் நிலையில், ஆனால், சொந்த வீடு கூட இல்லாமல் தவித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், இவருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறியபிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கித் தருவேன் என்றும் உறுதி அளித்தார். இதன்படி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினிகாந்த் பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து, சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை புது வீட்டிற்கு வந்த ரஜினிகாந்த், பூஜையறையில் குத்து விளக்கேற்றி, பாபா படம் ஒன்றையும் கலைஞானத்துக்கு பரிசளித்தார். இந்நிலையில் கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்துள்ளார் கலைஞானம்.