சிறுவயதில் தாய் தந்தையால் அனாதையாக விடப்படும் அண்ணன் தங்கை இருவரையும் அரவணைத்து வளர்க்கிறார் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகி பாபு. அண்ணன் ஏகன் தங்கை சத்திய தேவி மீது உயிரையே வைத்திருக்கிறார். அவருக்காக எதையும் செய்ய துணிகிறார். தங்கையும் அதே போல் அண்ணன் மீது பாசத்தை பொழிகிறார். ஒரு கட்டத்தில் சத்தியதேவி ஒருவரை காதலிக்க அதை அறிந்து ஏகன் கோபப்பட்டு காதலனை வெட்ட அரிவாளுடன் துரத்துகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பது கிளைமாக்ஸ்.
ஒரு வரியில் இந்த கதையை கேட்பதற்கு அண்ணன் தங்கை பாசம் என்று தோன்றும் ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கையின் அர்த்தத்தை காட்சிக்கு காட்சி போதித்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
புதுமுக ஹீரோவாக நடித்திருக்கும் ஏகன் அண்ணன் கதாபாத் திரத்தில் யார் சாயலும் இல்லாமல் நடித்து எதார்த்த அண்ணனாக மனதைக் கவர்கிறார். அதற்கு அவரது நிறமும் ஒரு பிளஸ் பாயிண்டாக அமைகிறது. கருப்பா இருக்கிறவன் பாசக்காரன் அதேசமயம் கோபக்காரன் என்பதை ஏகன் பாத்திரம் நிரூபிக்கிறது
ஏகனின் தங்கையாக நடித்திருக்கும் சத்திய தேவி அண்ணன் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலை கைவிடத் துணிவது சபாஷ் போட வைக்கிறது.. அவரது நடிப்பும் எதார்த்தம் மீறாமல் இருக்கிறது.
ஏகனை காதலிக்கும் சட்டி. பானை கடைக்காரராக வரும் பிரிகிடா பாவாடை சட்டையில். கண்களை கவர்கிறார். காதல் வழிய வழிய பேசி கிக் ஏற்றுகிறார்.
கோழிப்பண்ணை ஓனராக வரும் யோகி பாபு குணச்சித்திர நடிப்பில் கொடி கட்டிப் பறக்கிறார்.. தனது காமெடி வசனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு கண்ணியமான வசனங்கள் பேசி அசத்துகிறார்.
இயக்குனர் சீனு ராமசாமி தனது எல்லா படங்களிலும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதைகளையே சொல்லி இருக்கிறார். இந்தப் படத்திலும் அந்த பணியை திறம்பட செய்து முடித்திருக்கி றார். இவ்வளவு இயல்பாக எதார்த்தமாக குடும்ப உறவுகளையும் மன்னிக்கும் மனப்பான்மையும் மனதுக்குள் பதிய வைக்க இவர் ஒருவரால் மட்டுமே முடியும். பாதை மாறாமல் சீனு ராமசாமியின் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
அசோக் ராஜ் ஒளிப்பதிவு வண்ணங்களை பூசாமல் பக்கத்தில் வீட்டில் நடக்கும் சம்பவத்தை காணும் காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார்.என் ஆர் ரகுநந்தன் இசையில் மெலடிகள் இனிதே பாய்கிறது.கோழி பண்ணை செல்லதுரை- குடும்பப் பாங்கான படம்.!