வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், ரயில்களில் பயணம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது எனத் தெரிகிறது.
ஊரடங்கிற்குப் பிறகு ரயில்கள் ஓடும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரயில் பயணிகள் பல முக்கிய நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இது தொடர்பான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம்.
பொதுவாக, விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகளைவிட, ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் மேலும் சிக்கலாகவே இருக்கும்.
இதோ அந்தப் புதிய விதிமுறைகள்…
1) பயண நேரத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாகவே பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்துவிட வேண்டும்.
2) ரயில் நிலையங்களில் ஒவ்வொரு பயணிக்கும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.
3) முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணிக்க முடியும்.
4) ‘வெயிட்டிங் லிஸ்ட்’ பயணிகளுக்கு ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது.
5) ஸ்லீப்பர் கிளாஸ் (2ஆவது வகுப்பு) பெட்டிகள் மட்டுமே ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும்; ஏ.சி. பெட்டிகள் கிடையாது.
6) பயண நேரத்திற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாகவே பயணிகள் தங்கள் உடல்நலம் குறித்த தகவல்களை ரயில்வேயிடம் தெரிவிக்க வேண்டும்.
7) ரயில் நிலையங்களிலும், பெட்டிகளிலும் சமூக விலகலை பயணிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
8) ஒவ்வொரு பயணியும் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும். அவர்களிடம் அவை இல்லாவிட்டால், ரயில் நிலையங்களில் அவற்றை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
9) 6 பெர்த்துகள் உள்ள ஒவ்வொரு கேபினிலும் 2 பயணிகளுக்கு மட்டுமே இடம் உண்டு.
10) ரயில் பயணிகள் மற்றும் ரயில்வே பணியாளர்கள் தவிர வேறு யாரும் பெட்டிகளில் ஏற அனுமதி இல்லை.
11) ஒவ்வொரு ரயிலும் ‘பாயிண்ட் டூ பாயிண்ட்’ என்பதுபோல், புறப்படும் & சேரும் இடங்கள் தவிர எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது.
12) ஒவ்வொரு ரயில் பெட்டியின் 4 கதவுகளும் ரயில் நிற்கும் வரை பூட்டப்பட்டிருக்கும்.
13) பயணத்தின்போது ஏதாவது ஒரு ரயில் பயணிக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தால், நடு வழியிலேயே அவர் வலுக்கட்டாயமாக இறக்கி விடப்படுவார்; இறங்கும் இடத்தில் அவர் தனிமைப்படுத்தப்படுவார் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவார்.
14) அடுத்த அறிவிப்பு வரும் வரை பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் வினியோகம் இருக்காது.
வரும் 14ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் என நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றே தெரிகிறது.