ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருட நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.ஸ்கிம்மர் பொருத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் கிளையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண் அமைந்துள்ள கீபேட் மேலே சிறிய அளவில் கேமரா போன்று தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் அயனாவரம் போலீசார் ஏ.டி.எம்மில் சோதனை செய்ததில் ஸ்கிம்மர் கருவி ஒன்றும் ஏடிஎம் பின் நம்பர் கீபேட் மேல பொருத்தப்பட்டு இருந்த சிறிய ரகசிய கேமரா இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகிகளுக்கு போலிசார் தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மேலும் சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருப்பதால் அவர்களும் இந்த வழக்கில் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரம் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகிகள் என கூட்டாக ஆய்வு நடத்தி வருகின்றனர் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டது உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் ஏடிஎம்மில் இருந்த 12 லட்சம் ரூபாய் பணம் தப்பித்தது. மேலும் முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் மாலை ஏடிஎம்மில் பணம் நிரப்பப்பட்டது அப்போது ஸ்கிம்மர் கருவி இல்லை எனவும், நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் நேற்று முன்தினம் மாலையிலிருந்து நேற்று மாலை வரை ஏடிஎம்க்குள் யாரெல்லாம் வந்தார்கள்? சந்தேகிக்கும்படியாக நபர்கள் இருக்கிறாராகளா? என்பது குறித்து ஏ.டி.எமில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் ஸ்கிம்மர் கருவி மூலம் இதுவரை பதிவான ஏடிஎம் அட்டைகளின் விவரங்கள் என்னென்ன? எத்தனை பேருடைய விவரங்கள் அதில் உள்ளது? என்பது குறித்து தெரிந்துகொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஸ்கிம்மர் கருவியயை தொழில்நுட்ப ரீதியில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் சென்னையில் ஸ்கிம்மர் கருவி மூலம் இதே பாணியில் திருட்டில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்ய போலிசார் திட்டமிட்டுள்ளனர்.