என்ன செய்யப் போகிறார்கள் பிரேமலதா விஜயகாந்தும் சதீஷும் ?

அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பதில் சரியான முடிவெடுக்காமல் தனது பலமான வாக்கு வங்கியை இழந்த தேமுதிக, இந்தத் தேர்தலிலும் சரியான அரசியல் முடிவை எடுக்காததால் படுதோல்வியைச் சந்தித்தது. அதன் வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே சரிந்துள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் தனி மனிதராக ஒருவர் கட்சியைத் தொடங்கி (பலரும் தொடங்கியுள்ளனர்) அதை நல்ல வாக்கு சதவீதத்துடன் முன்னுக்குக் கொண்டுவந்து தமிழக எதிர்க்கட்சியாக அமர்த்திய பெருமை விஜயகாந்த் ஒருவரை மட்டுமே சாரும்.

திராவிடர் கழகம் பெரியாரால் வளர்த்தெடுக்கப்பட்டாலும் அது ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து வந்தது. திமுக அண்ணாவால் உருவாக்கப்பட்டாலும் அது திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்தது. எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினாலும் அது திமுகவிலிருந்து பிரிந்து வந்தது. அதன்பின் தமாகாவை மூப்பனார் உருவாக்கி பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்தாலும் அதுவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த கட்சியே.

ஆனால், நடிகராக அரசியலில் புகுந்து தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி எம்ஜிஆருக்குப் பிறகு அதிகம் உதவி செய்பவர் என்ற பெயரும், நடிகர் சங்கத்தில் ஆளுமை என்ற பெயரையும் ஒருசேரத் தட்டிச் சென்றவர் விஜயகாந்த் மட்டுமே. அதன் பின்னர் சீமான், கமல், சரத்குமார் என வரிசை நீண்டாலும் முதல் சாதனையும், பெருமையும் விஜயகாந்தையே சாரும்.

2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜயகாந்த் கடவுளுடன் மட்டுமே கூட்டணி என 234 தொகுதிகளிலும் தனித்து நின்றார். திமுக, அதிமுகவுக்கு அடுத்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வார்டு வாரியாக உறுப்பினர்களை தேமுதிக கொண்டிருந்தது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இருவரின் சறுக்கலுக்கும் விஜயகாந்த் காரணமாக இருந்தார். முக்கியமாகப் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்த அதிமுக தோல்வி அடைந்தது.

இந்தத் தேர்தலில் சுமார் 27,64,000 வாக்குகளை தேமுதிக பெற்றது. (தற்போது நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள 29 லட்சம் வாக்குகளுக்கு இணையானது). இது மொத்த வாக்கில் 8.33 சதவிகிதம் ஆகும். இதனால் விஜயகாந்த் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் நடித்ததால் கேப்டன் என அன்போடும் எம்ஜிஆர் போல் உதவி செய்ததால் கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.

அடுத்து 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக எல்லோரையும் பிரமிப்பாகப் பார்க்க வைத்தது. பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அந்தத் தேர்தலில் 30,73,479 வாக்குகளை விஜயகாந்த் பெற்றார். இது பதிவான மொத்த வாக்குகளில் 10.1 சதவீதமாகும். தேமுதிக மிகப்பெரிய கட்சியாக தமிழக அரசியலில் உருவெடுத்தது.

திமுகவின் 2006-2011 ஆட்சியால் கோபமுற்ற எதிர்க்கட்சிகள் அதிமுகவுடன் இணையத் தொடங்கின. விஜயகாந்தும் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் அதிமுகவுடன் இணைந்தார். இந்தத் தேர்தலில் 41 இடங்களில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 29 இடங்களை தேமுதிக கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 7.88 ஆகக் குறைந்தது. ஆனால் அரசியல் மரியாதை உயர்ந்தது.

எத்தனை இளைஞர்கள் சட்டப்பேரவை வாசலை மிதித்தனர். 1962, 67 தேர்தல்களில் திமுகவில் இளைஞர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆனதுபோல், அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது 1977இல் சட்டப்பேரவைக்கு வந்த இளைஞர்கள்போல், 2011ஆம் ஆண்டிலும் தேமுதிகவில் அதிக அளவிலான இளைஞர்கள் சட்டப்பேரவைக்கு முதன்முறையாகச் சென்றனர். சைக்கிள் கடை தொழிலாளியான நல்லத் தம்பி எழும்பூரில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியைத் தோற்கடித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார் இந்த பெருமை விஜயகாந்த்தை சாரும்.

அன்று அவரிடமிருந்த பல புதுமுகங்கள் இன்று திமுக, அதிமுகவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களாக உள்ளனர். 2011ஆம் ஆண்டு எதிர்க்கட்சி வரிசையில் திமுகவை விடப் பெரிய கட்சியாக அமர்ந்த தேமுதிக, அதன் பின்னர் ஆளும் அரசோடு நட்பு பாராட்டி மக்களுக்கான பிரச்சினைகளுக்காகப் பேசி கட்சியை வளர்ப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் போக்கினால் இழந்தது.

எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் விஜயகாந்த் புறக்கணித்தார். தொடர்ந்து அதிமுக, திமுகவைக் கடுமையாக எதிர்த்தார். பத்திரிகைகளை எதிர்த்தார். அதனால் அவரது இமேஜ் சரிய ஆரம்பித்தது. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவின் வலுவான வெற்றியால் வாக்கு சதவீதம் சரிந்தது.

அதன் பின் 2016ஆம் ஆண்டு திமுக தலைவர் பகிரங்க அழைப்பு விடுத்தும் இடையில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக மக்கள் நலக் கூட்டணிக்குச் சென்றார். இதனால் வெற்றிபெற முடியாமல் போனது, திமுகவின் வெற்றியும் பாதித்தது. அதிமுக இரண்டாம் முறை ஆட்சி அமைய வாய்ப்பாக அமைந்தது. அரசியல் தலைவர்கள் எடுக்கும் சில சிறிய தவறுகள் கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இது அமைந்தது. தேமுதிகவின் வாக்கு கணிசமாகக் கரைந்தது.

அந்த நேரத்தில் விஜயகாந்தின் உடல்நலனும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவரால் இயல்பான அரசியலுக்கு வர இயலாமல் போனது. இதனால் பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் கட்சியின் முகங்களாக மாறினர். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பு தேமுதிகவுக்குக் கிடைத்தது. மக்களின் மனதைப் படிக்காதவர்கள் இரு பக்கமும் பேசி திடீரென அதிமுக கூட்டணியின் பக்கம் தாவினார்கள். விளைவு மீண்டும் படுதோல்வி. வாக்கு சதவீதம் 2 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்தது.

மிகப்பெரும் ஆல விருட்சமாக வளரவேண்டிய கட்சி, தலைவரின் உடல்நிலை, தவறான முடிவு காரணமாகத் தடுமாறியது. இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்தனர். திமுக பக்கமும் வராமல், அதிமுகவுடனும் முறையாகக் கூட்டணி பற்றிப் பேசாமல் வெளியில் பேட்டி கொடுத்து அதிமுகவின் கோபத்துக்கு ஆளாகி தனித்து விடப்பட்டனர்.

இதன்பின் அமமுகவுடன் கூட்டணி அமைத்தனர். விஜயகாந்தை வேனில் அமர்த்தி கையசைத்து வாக்குகளைப் பெறலாம் என்கிற எண்ணம் ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் நிலையில் மீண்டும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். இம்முறை வாக்கு சதவீதம் அதல பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. 0.45 என ஒரு சதவீதத்திற்கும் கீழே சென்றுவிட்டது.

அரசியல் கட்சிகள் வீழ்வதும் வீறுகொண்டு எழுவதும் புதிதல்ல. ஆனால், தவறான முடிவால் மீண்டும் மீண்டும் வீழ்வதும், தலைவன் செயல்படாமல் தடுமாறும் கட்சிக்கு மேலும் சிக்கலையே உண்டுபண்ணும். இனியும் தேமுதிக தலைமை விழித்துக் கொள்ளாவிட்டால் தேமுதிக என்கிற கட்சி தமிழக அரசியல் களத்திலிருந்து துடைத்தெறியப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை? என்ன செய்யப் போகிறார்கள் பிரேமலதா விஜயகாந்தும் சதீஷும் ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !