ஊரடங்கு நடவடிக்கை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள ஓராண்டாகும் ?

கரோனா வைரஸ் : அரச
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து நிறுவனங்கள் மீள்வதற்கு மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சிப்காட், இருங்காட்டுக் கோட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் கே.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

”எதிர்பாராத வகையில் இந்த ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மார்ச் மாதத்தில் 50 சதவீத அளவுக்குக் கூட வர்த்தகம் நடைபெறவில்லை. இதேபோல ஏப்ரல் 14 வரை கதவடைப்பு நீடித்துள்ளதால் ஏப்ரல் மாத விற்பனை, விநியோகம் எதுவும் நடைபெறாது.விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பை அளிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தான். இத்தொழிலில் தமிழகம் தவிர பிற மாநிலங்களிலிருந்து பணியில் ஈடுபட்டிருப்போர் அதிகம். குறிப்பாக சென்னையைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம் எனில் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 25 சதவீதம், அதேசமயம் பிற மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் 50 சதவீதம் பேர்.ஊரடங்கு அறிவித்ததிலிருந்தே தங்கள் சொந்த மாநிலத்துக்கும், மாவட்டங்களுக்கும் பலர் திரும்பி விட்டனர்.இதனால் ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டாலும் உடனடியாக பணியாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். வெளி மாநிலப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப மாட்டார்கள்.

அன்றாடப் பணிகளை நடத்த நிதி தேவை மிகவும் அவசியமாகும். சப்ளை செய்த நிறுவனங்களிடமிருந்து உடனடியாக பணம் கிடைக்காது. இதேபோல பொருள்களை சப்ளை செய்யும் நிறுவனங்கள் உடனடியாக பணம் தந்தால் மட்டுமே பொருள்களை சப்ளை செய்ய முடியும் என்ற நிபந்தனை விதிப்பர். ஊழியர்களும் தங்களது வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அட்வான்ஸ் கேட்பர். அதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.மின் கட்டணம் செலுத்துவதற்கு தற்போது சலுகை தரப்பட்டுள்ளது. இது மேலும் நீட்டிக்கப்பட வேண்டும்.வங்கிக் கடன் நிலுவை, மின் கட்டணம், ஊழியர்களுக்கான இஎஸ்ஐ, இபிஎப் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றோடு அரசுக்கான வரியையும் செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்துமே அடுத்தடுத்து எதிர்கொள்ள வேண்டிய நிதிச் சுமைகளாகும்.

தொழிற்சாலைகள் நீண்டகாலம் இயங்காததால் அவற்றை மீண்டும் செயல்படுத்த சிறிது காலம் பிடிக்கும். இன்ஜினீயரிங், ஆட்டோமொபைல், எர்த் மூவிங் எக்யூப்மென்ட், எலிவேட்டர்ஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சகஜ நிலைக்குத் திரும்பும்போதுதான் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கும். இதனால் மே, ஜூன் மாதங்களிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பது சிரமம். சரக்கு போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பினால்தான் பொருள்கள் விநியோகம் சீராக இருக்கும்.தற்போதைய ஊரடங்கு நடவடிக்கையால் சேவைத்துறை, சில்லறை வர்த்தகம், பார்மா, ஹெல்த்கேர், தொலைத் தொடர்பு உள்ளிட்ட தொழில்துறைக்கு 10 சதவீத பாதிப்பு ஏற்படும்.ஆட்டோமொபைல், கட்டுமானம், நுகர்வோர் தயாரிப்பு பொருள்கள், லாஜிஸ்டிக், ஜவுளி, தோல் தொழில்துறைக்கு 30 சதவீத அளவுக்கு பாதிப்பு இருக்கும்.எண்ணெய், எரிவாயு, விமான போக்குவரத்து, சுற்றுலா,காப்பீடு, ஹோட்டல் சார்ந்த தொழில்கள் 50 சதவீத அளவுக்கு பாதிக்கப்படும்.

ஏப்ரல் பிற்பாதியில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், மே மற்றும் ஜூன் மாதங்கள் வரையில் நிறுவனங்களைச் செயல்படுத்துவது மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். 3 ஷிப்ட்கள் பணி நடைபெற்ற நிலை மாறி இனி ஒரு ஷிப்ட் நடைபெறும் அளவுக்கு ஆர்டர்கள் கிடைப்பது சந்தேகம். இதனால் வேலையிழப்பும் இருக்கும்.ஏற்றுமதி நிறுவனங்கள் குறிப்பாக திருப்பூர் பின்னலாடை மற்றும் வாணியம்பாடி, வேலூர் பகுதிகளைச் சேர்ந்த தோல் தொழில் நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஏற்கெனவே ஆர்டர் அளித்துள்ள நிறுவனங்கள் இந்த வைரஸ் பரவல் காரணமாக தங்களது ஆர்டர்களை ரத்து செய்துள்ளன. இதனால் இவை அனுப்ப வேண்டிய பெருமளவிலான ஆர்டர்கள் தேங்கியுள்ளன. இவற்றுக்காக வங்கிகளில் பெற்றிருந்த கடன் தொகைகளை செலுத்த வேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது.ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது 2020-ம் ஆண்டு தொழில்துறையினருக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு மிகவும் சவால் நிறைந்த ஆண்டாகிவிட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற வர்த்தகத்தில் 50 சதவீத அளவுக்குக் கூட நடைபெறுவது சந்தேகம்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சில நிர்வாக நடைமுறைகளை தொழிற்சாலை ஆணையகம் பிறப்பித்துள்ளது. இதைச் செயல்படுத்துவதன் மூலம் நிறுவனங்களுக்கு செலவுதான் அதிகரிக்கும். மேலும் ஊழியர்களின் உடல் நலனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.அரசு அளிக்கும் நிவாரணங்கள் அதாவது மூன்று மாதங்களுக்குப் பிறகு தவணை செலுத்துவது உள்ளிட்ட சலுகைகள் போதுமானதல்ல. மறு சீரமைப்புத் திட்டம் ஒன்றைத் தொடங்கி இத்துறையினர் மீண்டு எழ வழி வகை செய்ய வேண்டும். சிறு, குறுந்தொழிலில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு அளிக்கப்படும் மானியத் தொகையை 40 சதவீதமாக அதிகரிப்பதன் மூலம் இத்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். இதன் மூலம் வேலையிழப்பைத் தவிர்க்கலாம்.விற்பனை வரி உள்ளிட்ட சலுகைகள் பிற நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதை இந்தியாவும் பின்பற்றலாம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜிஎஸ்டி செலுத்தும் சலுகையாவது அளிக்கலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும். இதன் மூலம் நிதி புழக்கம் ஓரளவு ஈடுகட்டப்படும்.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையைப் புறக்கணித்தால் மிகப் பெரும் வேலையில்லாத் திண்டாட்டம் உருவாகும். இத்துறையின் பிரச்சினைகளை உரிய கண்ணோட்டத்தில் அணுகினால் குறைந்தபட்சம் ஓராண்டிலாவது இந்நிறுவனங்கள் ஓரளவுக்கு தங்களை தக்க வைத்து முன்னேற்றமடையும்”.

இவ்வாறு பாலசுப்ரமணியன் குறிப்பிட்டார்