உலகில் அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது இடம் !

உலகில், அதிக சொத்து உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளதாக, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறுவனமான, ‘கிரெடிட் சுவிஸ்’ ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணக்கார நாடுகளில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம், அந்நாட்டின் தனி நபர் வருவாய், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் உள்ளிட்ட ஒரு சில நாடுகளை விட குறைவாக உள்ளது. அரசு, தனி நபர், குடும்பம், தொழில்கள் ஆகியவற்றின் சொத்து மதிப்பில், கடன் போக, எஞ்சிஉள்ளது, ஒரு நாட்டின் மொத்த சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது.

இந்த வகையில், 2019ல், உலகின் மொத்த சொத்து மதிப்பு, 25 ஆயிரத்து, 560 லட்சம் கோடி ரூபாய்; இது, 2018ல் இருந்ததை விட, 639 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.வரும், 2024ல், உலகின் சொத்து மதிப்பு 32 ஆயிரத்து, 589 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. உலகில், கோடிக்கணக்கான மக்கள், வறுமையால் இறக்கின்றனர். இருந்தபோதிலும், தனி நபரின் சராசரி சொத்து மதிப்பு, 50 லட்சம் ரூபாயாக உள்ளது.

உலகளவில், முதல், 10 இடங்களில் உள்ள பணக்கார நாடுகளில், இந்தியா, ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவின் சொத்து மதிப்பு, 895 லட்சம் கோடி ரூபாய்; இதில், தனிநபர் சராசரி சொத்து, 10.34 லட்சம் ரூபாய்; சராசரி கடன், 95ஆயிரத்து, 566 ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உலக இளையோர் எண்ணிக்கையில், இந்தியா, 17 சதவீத பங்களிப்பையும், சர்வதேச சொத்து மதிப்பில், 3.5 சதவீதத்தையும், இந்தியா கொண்டுள்ளது.

உலக சொத்து மதிப்பு பட்டியலில், அமெரிக்கா, 7,526 லட்சம் கோடி ரூபாயுடன், முதலிடத்தில் உள்ளது. இங்கு, பெருங்கோடீஸ்வரர்கள், 1.80 கோடி பேர் உள்ளனர். தனிநபரின் சராசரி சொத்து மதிப்பு, 3 கோடி ரூபாய்; சராசரி கடன், 44 லட்சம் ரூபாய்.சீனா, 4,544 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. உலகளவில் உள்ள இளையோர்களில், சீனாவில் மட்டும், 21.4 சதவீதம் பேர் உள்ளனர். உலகின் மொத்த சொத்தில், சீனாவின் பங்கு, 17.7 சதவீதமாக உள்ளது. இங்கு தனி நபர் சராசரி சொத்து மதிப்பு, 41 லட்சமாகவும், சராசரி கடன், 3 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.

உலகின் மொத்த சொத்தில், பாதி அளவு, அமெரிக்கா, சீனா வசம் உள்ளன. ஜப்பான், 1,775 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.69 கோடி ரூபாய்; சராசரி கடன், 20 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ளது. அடுத்த இடத்தில் ஜெர்மனி உள்ளது. இந்நாட்டின் சொத்து மதிப்பு, 1,065 லட்சம் கோடி ரூபாய். தனி நபர் சொத்து மதிப்பு, 1.53 கோடி ரூபாய்; சராசரி கடன், 21.84 லட்சம் ரூபாய்.

பிரிட்டன், 1,029 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை கொண்டுள்ளது. இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.98 கோடி ரூபாய்; சராசரி கடன், 35.76 லட்சம் ரூபாய். பிரான்ஸ், 974 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இங்கு, தனி நபர் சொத்து மதிப்பு, 1.96 கோடி ரூபாய்; சராசரி கடன், 27.55 லட்சம் ரூபாய். இத்தாலி, 802 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டில், தனி நபர் சொத்து மதிப்பு, 1.66 கோடி ரூபாய் ஆகவும், சராசரி கடன், 15.77 லட்சம் ரூபாய் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சொத்து மதிப்பு, 608 லட்சம் கோடி ரூபாய். இங்கு, ஒருவரின் சொத்து மதிப்பு, 2.08 கோடி ரூபாய் ஆகவும், சராசரி கடன் 42.28 லட்சம் ரூபாய் ஆகவும் உள்ளது. ஸ்பெயின், 551 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டின் தனி நபர் சொத்து மதிப்பு, 1.47 கோடி ரூபாய்; சராசரி கடன், 16.90 லட்சம் ரூபாய் என, மதிப்பிடப்பட்டு உள்ளதாக, கிரெடிட் சுவிஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல், புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியதில், சீனா, அமெரிக்கா, முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. இந்நாடுகளில், முறையே, 799 மற்றும் 626 பெருங்கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இந்தியா, மாதம் குறைந்தது மூன்று பேர் வீதம், புதிதாக, 34 பெருங்கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பெருங்கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, 138ஆக உயர்ந்துள்ளது.இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர், முகேஷ் அம்பானி, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர் சொத்து மதிப்பு 4.75 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இவர், சராசரியாக ஒரு மணி நேரத்தில், 7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

உலகில், 4.70 கோடி பெருங்கோடீஸ்வரர்கள் உள்ளனர். இவர்களிடம், 11 ஆயிரத்து, 218 லட்சம் கோடி ரூபாய் சொத்து உள்ளது. இது, உலக சொத்து மதிப்பில், 44 சதவீதம்.அதேசமயம், உலக மக்கள் தொகையில், 57 சதவீதம், அதாவது, 288 கோடி பேரிடம், 1.8 சதவீத அளவிற்கே, அதாவது, 447 லட்சம் கோடி ரூபாய் சொத்து தான் உள்ளது.