உலகிலேயே சாலை விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிப்பதில்லை. இதுதான் சாலை விபத்துக்களுக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வைக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக எடுத்து வருகிறது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை பல மடங்கு உயர்த்துவதும் ஒன்றாகும். தண்டனைகள் கடுமையாக இல்லாததன் காரணமாகவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை என மத்திய அரசு கருதுகிறது. எனவே அபராத தொகையை கடுமையாக்கினால், அவர்கள் மாறுவார்கள் எனவும் மத்திய அரசு நம்புகிறது. இதன் காரணமாக மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா சமீபத்தில்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மிக கடுமையான முயற்சிகளுக்கு பின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சூழலில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிக அபராதம் உள்பட திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் 63 விதிகள் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் புதிய வெப்சைட் தொடக்க நிகழ்ச்சி புது டெல்லியில் ஆகஸ்ட் 21 ல் நடைபெற்றது. இதில், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதில் 63 விதிகளை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.
ஆட்டோமொபைல் துறையின் கடும் வீழ்ச்சிக்கு காரணமான இந்த 8 உண்மைகளை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டார்கள் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”இந்த 63 விதிகளில் அபராதங்களை நாங்கள் உயர்த்தியுள்ளோம். குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவது மற்றும் ஓவர்லோடு உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது” என்றார். அத்துடன் இந்த விதிகள் அனைத்தையும் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் நிதின் கட்கரி கூறினார். சட்ட ரீதியிலான ஆய்வுக்கு உதவும் வகையில் அவை சட்ட அமைச்சகத்திற்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 2 முதல் 4 நாட்களுக்குள் அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அதிரடி தடை? மிக முக்கியமான முடிவுகளை எடுத்தது மத்திய அரசு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கான அபராத தொகை 500 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால் அது தற்போது அதிரடியாக 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. சாலை விபத்துக்களுக்கு இது மிக முக்கியமான காரணம். ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முன்பு 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது அது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு விதிமுறை மீறல்களுக்கும் அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இனி வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் அபராதம் செலுத்துவதில் இருந்து மட்டுமல்லாது விபத்துக்களில் இருந்தும் தப்பலாம். லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் இனி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டோம். அதேபோல் இதர போக்குவரத்து விதிமீறல்களுக்கு முன்பு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது? தற்போது அது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது? என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.
வாகன ஓட்டிகள் பொதுவான குற்றங்களில் ஈடுபட்டால், செக்ஸன் 177ன்படி முன்பு 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமை என்ற குற்றத்திற்கு, செக்ஸன் 179ன் கீழ் பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான். ஆனால் புதிய அபராத தொகை 2,000 ரூபாய். அதே நேரத்தில் வாகனங்களை அதிவேகமாக இயக்குபவர்களுக்கு செக்ஸன் 183ன்படி முன்பு 400 ரூபாய் மட்டுமே அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி வாகனங்களை அதிவேகமாக இயக்கினால், இலகுரக மோட்டார் வாகனம் என்றால் 1,000 ரூபாயும், மீடியம் பாசஞ்சர் வாகனம் என்றால் 2,000 ரூபாயும் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும். பொது சாலைகளில் ரேஸிங்கில் ஈடுபடுபவர்களுக்கான பழைய அபராத தொகை 500 ரூபாய் மட்டும்தான் (செக்ஸன் 189). ஆனால் புதிய அபராத தொகை 5,000 ரூபாய். பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு முன்பு செக்ஸன் 192ஏ-ன் கீழ் 5,000 ரூபாய் வரை மட்டுமே அதிகாரிகளால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் இந்த குற்றத்திற்கான புதிய அபராத தொகை 10,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம் ஓவர்லோடு. வாகனங்களில் ஓவர்லோடு ஏற்றி செல்பவர்களுக்கு முன்பு செக்ஸன் 194ன் படி வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால் ஓவர்லோடிங் குற்றத்திற்கான புதிய அபராத தொகை 20,000 ரூபாய் என ஒரே அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ஒவ்வொரு கூடுதல் டன்னுக்கும் தனியாக 2,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அதே சமயம் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு முன்பு செக்ஸன் 194பி-ன் படி 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது. இது தற்போது 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு செக்ஸன் 196ன் கீழ் 1,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இது தற்போது 2,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற எமர்ஜென்ஸி வாகனங்கள் வந்தால் வழி விடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? இருந்தால் நிச்சயமாக நல்லது. தொடர்ந்து கடைபிடியுங்கள். ஒரு வேளை அப்படிப்பட்ட ஒரு நல்ல பழக்கம் உங்களுக்கு இல்லாவிட்டால், இனியாவது பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் எமர்ஜென்ஸி வாகனங்களுக்கு வழி விடாவிட்டால், செக்ஸன் 194இ-ன் படி உங்களுக்கு இனி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சரி, தண்டனை எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா? என நீங்கள் கேட்பது புரிகிறது. இது அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் பொருந்தும். ஆம், இந்த விதிமுறைகளை அமல்படுத்த கூடிய அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். இதில், விசேஷம் என்னவென்றால், அந்த அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், அந்த குற்றத்திற்கு சாதாரண வாகன ஓட்டிகளுக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படுகிறதோ, அதை விட இரு மடங்கு அதிக அபராதம் அதிகாரிகளுக்கு விதிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியது. ஏனெனில் கரிசணம் காட்டி கொண்டே இருப்பதால்தான் வாகன ஓட்டிகள் தொடர்ந்து தவறு செய்து கொண்டே உள்ளனர். இனி ஒரு முறை அபராதம் செலுத்தி விட்டால், அடுத்த முறை அந்த தவறை செய்ய வாகன ஓட்டிகள் சிந்திப்பார்கள். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.