இந்தியா முழுவதுமுள்ள தொழில்துறைகள் அனைத்தும் தற்போது மந்த நிலையை எதிர்கொண்டுள்ளன. வாகன தொழில்துறையில் மந்தநிலை தோன்றிய பின்னர், வேலைகளை இழக்க நேரிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர். பல்வேறு நிறுவனங்களும் தயாரிப்புகளை குறைத்துள்ளன. நுகர்வு பொருட்களின் துறையிலும் இப்போது மந்தநிலை உருவாகியுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்காவிட்டால், இந்த துறையும், பணியிடங்களை குறைப்பதை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்தியாவின் புகழ்பெற்ற பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி இது தொடர்பாக கவலை வெளியிட்டுள்ளது, இந்தியாவின் மிக பெரிய பிஸ்கட் நிறுவனமான பார்லே-ஜி 8,000 முதல் 10,000 வரை தொழிலாளர்களை குறைக்கலாம் என்று தெரிய வருகிறது, ஜிஎஸ்டி வரி அமலாகும் முன்னால் இருந்த வரி விதிப்பில் கிலோவுக்கு 100 ரூபாய் பிஸ்கட்டுகளுக்கு 12-14% வரியே இருந்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட பின், கிலோவுக்கு 100 ரூபாய் விலையுடைய பிஸ்கட் 18% ஜிஎஸ்டி வரி பிரிவில் உள்ளது.
குறைவான விலையுடைய பிஸ்கட்டுக்கு கலால் வரி இல்லாமல், விற்பனை வரி மட்டுமே இருந்தது.ஆனால், ஜிஎஸ்டியில் எல்லா வகையான பிஸ்கட்டுகளுக்கும் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே, 5 ரூபாய் விலையுடைய ஒரு பாக்கெட் பிஸ்கட்டுக்கு 18% வரி வசூலிக்கப்படுகிறது.இந்த வரி விதிப்புக்கு பிறகு, எல்லா நிறுவனங்களும் தங்களின் தயாரிப்பு பொருட்களுக்கு சற்று விலையேற்றி விற்க தொடங்கின. விளைவு, படிப்படியாக விற்பனை குறைய தொடங்கியது.ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டாக பார்லே-ஜி நிறுவனம் விலையை அதிகரிக்கவில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் 5-7% வரை விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டது என்றும் பார்லே-ஜி தயாரிப்பு துறையின் தலைவர் மனாக் ஷா பிஸ்னஸ் லைனிடம் தெரிவித்தார்.ஒரு கிலோ பிஸ்கட் 100 ரூபாய்க்கும், அதற்கு கிழேயும் என விலை இருந்தால், கிராமப்புறங்களில் அதிகம் விற்கப்படும் வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த காலண்டு விற்பனையில் 7-8% வரை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
1929ம் ஆண்டு நிறுவப்பட்ட பார்லே தயாரிப்பு நிறுவனம், சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வழங்குகிறது. இவர்கள் இந்தியா முழுவதிலுமுள்ள 10 தொழிற்சாலைகளிலும், 125 ஒப்பந்த தயாரிப்பு மையங்களிலும் வேலை செய்கின்றனர்.பிஸ்கட் தயாரிப்பு துறையில் பிரபலமான இன்னொரு நிறுவனமான பிரிட்டானியாவின் விற்பனையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.பிரிட்டானியாவின் நிர்வாக இயக்குநர் வருண் பெர்ரி, டிஎன்ஏ-யிடம் கூறுகையில், “6% வளர்ச்சிதான் பெற்றுள்ளதால் சற்று கவலை அடைந்துள்ளோம். 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டை வாங்குவதற்கே வாடிக்கையாளர்கள் இரண்டு முறை சிந்திக்கிறார்கள். பொருளாதாரத்திலும் தீவிர பிரச்சனை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கிராமப்புற சந்தைகளில் ஏற்பட்டுள்ள விற்பனை வீழ்ச்சியால், அதிவேக நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. விலை குறைவான பொருட்கள் கிராமப்புற சந்தைகளில் அதிகம் விற்பனையாகும். ஆனால், இந்த பொருட்களின் தயாரிப்பும் மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது.”ஓராண்டுக்கு முன்னால், நகர்புற சந்தைகளைவிட கிராமபுற சந்தைகளில் அதிக விற்பனை, அதாவது ஏறக்குறைய ஒன்றரை மடங்கு அதிக விற்பனை நடைபெற்றது, இப்போது கிராமபுற சந்தைகள் ஏற்கனவே மந்தநிலை அடைந்துள்ள நகர்புற சந்தைகளைவிட மெதுவாகவே வளர்கின்றன,” என்று வருண் பெர்ரி தெரிவிக்கிறார்.
சந்தை ஆய்வு நிறுவனமான த நீல்சனின் ஓர் அறிக்கை, ஏற்கனவே கணித்திருந்த இந்தியாவின் அதிவேகமாக நுகரப்படும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளது.இந்த துறை 11-12% வரை வளர்ச்சி காணும் என்று முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது. இப்போது இந்த வளர்ச்சி 9-10% வரை இருக்கும் என குறைக்கப்பட்டுள்ளது,அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் (Fast Moving consumer Goods) விற்பனையில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 37% இந்தியாவின் கிராமப்புறங்களை நம்பியே உள்ளது. முன்னதாக, கிரமப்புற சந்தையின் வளர்ச்சி விகிதம், நகர்ப்புற சந்தையைவிட 3-5% வரை அதிகமாக இருந்தது,இப்போது, கிராமப்புற சந்தையின் வளர்ச்சியும் வீழ்ச்சி கண்டுள்ளது. இரண்டாவது காலாண்டு முடிவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சந்தைகளின் வளர்ச்சி ஏறக்குறைய சமமாக இருந்து.
“உணவு பொருட்களின் எல்லா வகைகளிலும் இரண்டாவது காலாண்டில் மந்தநிலையே தெரிந்தது. பிஸ்கட், மசாலா, தின்பண்டங்கள், சோப்பு, டீ பாக்கெட் ஆகியவற்றின் விற்பனையில் பெரும் இறங்குமுகம் இருந்தது என்கிறார் நீல்சன் நிறுவன தெற்காசிய சில்லறை விற்பனை அளவீடு தலைவர் சுனில் கைய்யானி.அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனையின் வளர்ச்சி ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டில் 7-8% வரையும், ஜூலை முதல் டிசம்பர் வரையான இரண்டாவது அரையாண்டில் சுமார் 8%-ஆகவும் இருக்கும் என்று நீல்சன் மதிப்பிட்டுள்ளது. பருவமழை, அரசு கொள்கைகள் மற்றும் பட்ஜெட் அம்சங்கள் இந்த துறையில் மந்தநிலை ஏற்படுவதற்கு காரணமாகியுள்ளன.