இலங்கையில், ஒரு மருத்துவமனையில் தாடி, மீசையுடன் வந்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இலங்கையின் மாத்தறை பகுதியைச் சேர்ந்த, 29 வயதுள்ள ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அவர், தெற்கு மாத்தறையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அதிர்ச்சி: தாடியுடன் வந்த அவரை, மருத்துவமனை பணியாளர்கள், ஆண்கள் வார்டுக்கு அனுப்பினர். அங்கு, டாக்டர்களின் பரிசோதனையில், அவரது வயிற்றில் குழந்தை இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்து சோதனை செய்தனர். சோதனையில், அவருக்கு எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில், மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தாடி, மீசையுடன் ஒரு ஆண், பிரசவ வார்டுக்கு வலியால் துடித்தபடி வருவதை பார்த்த, அங்கிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: பெண்ணாக பிறந்த அந்த நபர், ‘ஹார்மோன்’ சுரப்பு காரணமாக ஆணைப் போல் வாழ்கிறார். தாடி, மீசை வளர்ந்ததற்கும் அது தான் காரணம்.
பால் தரமுடியாது: அவர் மனதளவில் ஆணாகவும், உடலளவில் பெண்ணாகவும் உள்ளார். அதனால், அவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். ஆனால், அவரால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியாது. இவ்வாறு, டாக்டர்கள் கூறினர். அந்த நபர், குழந்தையை வளர்க்க விரும்பவில்லை எனக் கூறியதால், மருத்துவமனை நிர்வாகம், குழந்தையை கவனித்து வருகிறது.குழந்தை பெற்றெடுத்தவர், ஆட்டோ டிரைவராக உள்ள நிலையில், அவரது, ‘லைசென்ஸ்’ மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில், அவர் ஆண் என்று தான் உள்ளது. தாடி, மீசையுடன் வந்த ஆணுக்கு குழந்தை பிறந்துள்ளது என, தகவல் பரவியதால், அவரை பார்க்க மருத்துவமனைக்கு பொதுமக்கள் திரள்கின்றனர். இதற்கிடையே, அந்த நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட, மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.