கடன் வாங்கைலையோ கடன் ! கூவி அழைக்கும் வங்கிகள்!!

நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் பொதுத்துறை, மற்றும் தனியார் வங்கிகளில் அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு கடன் முகாம் நடத்தப்படுகிறது.நாடு பெரும் பொருளாதார மந்தநிலையை அடைந்துள்ள நிலையில் பெரும்பாலான துறைகளில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் தொழிற்கூடங்களுக்கு வேலையில்லா நாள்களை அறிவித்துவருகின்றன. இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவருகின்றனர். மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளதே இந்த பொருளாதார மந்தநிலைக்கான காரணமாக சொல்லப்பட்டது. எனவே மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 400 மாவட்டங்களில் வங்கிகள் மூலம் கடன் முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் முதல்கட்டமாக அக்டோபர் 3 முதல் நான்கு நாள்களுக்கு 250 மாவட்டங்களில் கடன் முகாம் நடத்தப்படுகிறது. சில்லறை வர்த்தகர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வீடு மற்றும் வாகனம் வாங்க விரும்புவோர், கல்வி கடன் வாங்க விரும்புவோர், தனிநபர் கடன் வாங்க விரும்புவோர் ஆகியோருக்கு உடனடியாக கடன் வழங்கப்படுகிறது.

விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் மக்களுக்கு இந்த கடன் முகாம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதோடு இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தகட்ட கடன் முகாம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.