ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தில் இருந்து, அண்ணாநகர் டவர் கிளப் வெளியேற்றப்பட வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகரில், ‘டவர் கிளப்’ உள்ளது. மாநகராட்சியின் இடம் மற்றும் கட்டடம் என, ௩௩ ஆயிரத்து, 255 சதுர அடி, டவர் கிளப் வசம் உள்ளதால், அதில் இருந்து வெளியேறும்படி, மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை, சென்னை சிவில் நீதிமன்றமும் உறுதி செய்தது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம், மனு தாக்கல் செய்தது.
மாநகராட்சி தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘குத்தகைக்கு விடப்பட்ட இடம், தங்கள் வசம் இருப்பதாக, டவர் கிளப் கூறியிருப்பது பொய்யானது.டவர் கிளப்பின் தென் மேற்கு மூலையில் உள்ள கலையரங்க கட்டடம் தான், மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டு இருந்தது; 32 ஆயிரம் சதுர அடி இடம், குத்தகைக்கு விடப்படவில்லை. நீதிமன்றத்தில், பொய்யான மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என, கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதி இன்றி கட்டுமானம் செய்திருப்பதை, டவர் கிளப் ஒப்புக் கொண்டுள்ளது. 5,872 சதுர அடி மற்றும் கட்டடம் தான், குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், குத்தகைக்கு விடப்பட்ட பகுதியை சுற்றி, கிளப் நிர்வாகம் வளைத்துக் கொண்டது. திறந்தவெளி ஒதுக்கீட்டு இடத்தில், கட்டடங்களை கட்டியது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது.
ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள், இந்த கிளப்பில் நிர்வாகிகளாக இருந்துள்ளனர். ஆனால், அடிப்படை விதிகளை, கிளப் நிர்வாகம் மீறியது வேதனைக்குரியது. இடத்தை மீட்பதற் கான மாநகராட்சியின் நடவடிக்கைகளை தடுக்க, பல வழிகளிலும் முயற்சித்துள்ளது. விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட, 55 ஆயிரம் சதுர அடியில், 31ஆயிரம் சதுர அடி திறந்த வெளி நிலத்தை, கிளப் ஆக்கிரமித்துள்ளது. அனுமதியின்றி, அதில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, அகற்றப்பட வேண்டும். மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டுள்ளார்.