ஏ.பி.அசோக் குமார் தயாரிப்பில் ராகுல் அசோக் எழுதி, இயக்கி உள்ள படம் வெஞ்சென்ஸ். இந்த படத்தில் அபர்நதி, இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, டி.எம்.கார்த்திக் ஸ்ரீனிவாசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே. ஜேம்ஸ், சச்சு, மங்கல், சைதன்யா, ரேகா நாயர், சம்யுக்தா ஆகியோர் நடித்துள்ளனர். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அருண் ராஜ் பின்னணி இசை அமைக்க, இம்ரான் எடிட்டிங் பணிகளும், வைரபாலன் படத்தின் கலை பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்,.
அரசியல் களத்தையும், அதிகார வர்க்கத்தின் ஆசைகளையும் மையமாகக் கொண்டு இந்த வெஞ்சென்ஸ் படம் உருவாகியுள்ளது. சிறுவயதில் இருந்து தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை எப்போதும் பெருமையாக பேச வேண்டும், புகழ்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக நாயகி அபர்நதி இருக்கிறார். இதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் படித்து மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறார். இதற்காக பலரும் அவரை பாராட்டுகின்றனர். ஆனால் அந்த பாராட்டு சில நாட்களிலேயே காணாமல் போவதால் மனம் உடைகிறார்.
இதனைத் தொடர்ந்து தனது புகழை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு காரியங்களை செய்கிறார் அபர்நதி. பின்பு படித்து காவேரி என்ற மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக அமருகிறார். கலெக்டர் ஆன பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் அபர்நதி. அந்த சமயத்தில் மாநில முதல்வர் இளவரசுக்கும், இவருக்கும் இடையே பிரச்சனைகள் உண்டாகிறது. அந்த தடைகளை எல்லாம் தன்னுடைய புத்திசாலித்தனத்தின் மூலம் முறியடிக்கிறார் அபர்நதி. அவரின் வளர்ச்சியை கண்டு நடுங்கும் அரசியல் கூட்டம் அவரை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த சதிகளையும், தடைகளையும் தாண்டி அபர்நதி எப்படி தான் நினைத்ததை சாதிக்கிறார் என்பதே இந்த வெஞ்சென்ஸ் படத்தின் கதை.
கற்பனையான ஒரு மாநிலத்தில் கதை நடந்தாலும் தமிழகத்தில் நடக்கும் சமகால அரசியல் நகர்வுகளையும் இந்த படத்தில் வைத்துள்ளார் இயக்குனர் ராகுல் அசோக். படத்தில் முதல் பாதி விறுவிறுப்பாகவும், பெரிதாக போர் அடிக்காமல் நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி தான் படத்திற்கு பிரச்சனையாக அமைந்துள்ளது. இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு பொலிட்டிக்கல் டிராமாவை எமோஷனல் மற்றும் சட்டையர் கலந்து கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர், ஆனால் அது பல இடங்களில் நேர்த்தியாக இல்லை. குறிப்பாக படத்தின் பட்ஜெட் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அது முக்கியமான காட்சிகளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் பாடல்கள் இன்னும் சற்று நன்றாக இருந்திருக்கலாம். ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்தாலும், எடிட்டர் படத்தின் நீளத்தை இன்னும் சற்று குறைத்திருக்க வேண்டும். எடுத்துக் கொண்ட கதை சிறப்பாக இருந்தாலும், அதனை காட்டும் விதத்தில் இயக்குனர் கோட்டை விட்டுள்ளார் என்று சொல்லலாம்.
பழிவாங்கும் குணமும், தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் ஒருவருக்கு இருந்தால் அவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை இந்த வெஞ்சென்ஸ் படம் நமக்கு உணர்த்துகிறது.
