இந்திய கார் வாடிக்கையாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. புதிய கார் வாங்கும்போது இந்திய வாடிக்கையாளர்கள் விலைக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது உலகம் அறிந்த சங்கதி. ஆனால் நிலைமை தற்போது தலை கீழாக மாறி வருவது உண்மையில் ஆச்சரியமளிக்கிறது. ஆம், இந்திய கார் வாடிக்கையாளர்கள் விலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகிறது. அதற்கு பதிலாக காரின் ஸ்டைலுக்குதான் இந்தியர்கள் சிறப்பு கவனம் கொடுக்கின்றனர். மார்க்கெட்டிங் ஆய்வு நிறுவனமான ஜேடி பவர் இதனை தெரிவித்துள்ளது. ஜேடி பவர் நிறுவனம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்து காரின் லுக் மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்திய வாடிக்கையாளர்களின் அணுகுமுறை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதுவே விற்பனை திருப்தி என வந்து விட்டால் ஹூண்டாய் முதலிடம் பிடிக்கிறது. மஹிந்திரா மற்றும் டொயோட்டா அதற்கு அடுத்த இடங்களில் உள்ளன.
புதிய மாடலை தீர்மானிக்கும்போது, வாடிக்கையாளர்கள் காரின் ஸ்டைலிங்கிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் (2018ல் இருந்து 9 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது) என்பதை ஜேடி பவர் 2019 இந்தியா விற்பனை திருப்தி ஆய்வு தெரிவிக்கிறது. ஸ்டைலிங் என்றால், எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் என இரண்டிற்கும் வாடிக்கையாளர்களால் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் வாகனத்தின் தேர்வை தீர்மானிப்பதில், பெர்ஃபார்மென்ஸ், நம்பகத்தன்மை (இரண்டும் 7 சதவீத புள்ளிகள் உயர்ந்துள்ளன) மற்றும் டெக்னாலஜி (5 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது) ஆகிய அம்சங்களும் முக்கிய பங்காற்றுகின்றன என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு நேர் எதிராக விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகிறது. அதாவது வாகனத்தின் விலை/இன்ஸ்டால்மெண்ட் மற்றும் நிதி பெறும் திறன் ஆகிய இரு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது சரிந்து வருகிறது (இரண்டும் 4 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளன). இது குறித்து ஜேடி பவர் இயக்குனர் மற்றும் இந்தியாவிற்கான தலைவர் கவுஸ்டவ் ராய் கூறுகையில், ‘முன்பு இருந்ததை காட்டிலும் இன்றைய இந்திய கார் வாடிக்கையாளர்கள் மிகவும் நுட்பமானவர்கள். வாகனத்தின் டிசைன் மற்றும் வசதிகளில் அவர்கள் மிக தெளிவான எதிர்பார்ப்புடன் உள்ளனர். இன்றைய வாடிக்கையாளர்களின் முக்கியத்துவம் விலையில் இருந்து வாகனத்தின் லுக் ஆகிய அம்சங்களுக்கு மாறி வருகிறது’ என்றார்.
அதே சமயம் வாங்குபவர்களின் பொருளாதார பின்புலத்தை பொறுத்தவரை, மாதாந்திர குடும்ப வருமானம் 75 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகம் கொண்ட வாடிக்கையாளர்கள் 2019ல் வாங்குபவர்களில் 33 சதவீதமாக உள்ளனர். இது கடந்த 2017ம் ஆண்டு 18 சதவீதமாக மட்டுமே இருந்தது. எனவே இது குறிப்பிடத்தகுந்த அதிகரிப்பு ஆகும். இதன் விளைவாக வாடிக்கையாளர்களால் முன்பை காட்டிலும் காரின் விலையை குறைவான மாதங்களில் ஈட்டப்படும் வருமானம் மூலம் ஈடுகட்ட முடிகிறது (2017ல் 18 மாதங்கள் VS 2019ல் 15 மாதங்கள்). அதே நேரத்தில் வாகனங்களின் விலை அதிகரித்து கொண்டே வருவதையும் வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். வாகனங்களின் கொள்முதல் விலையானது கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரித்து கொண்டு வருவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விலைகள் கடந்த 2018ம் ஆண்டை விட 5 சதவீதமும், 2017ம் ஆண்டை விட 11 சதவீதமும் அதிகமாக உள்ளன. இந்த விலை உயர்வானது சிறிய கார் செக்மெண்ட்டில் தெளிவாகவே தெரிகிறது (2017ஐ விட 9 சதவீதம் அதிகம்). அதே நேரத்தில் விலை உயர்ந்திருந்தாலும் எஸ்யூவி செக்மெண்ட்டில் அது சற்று குறைவாகவே உள்ளது (2017ஐ விட 3 சதவீதம் அதிகம்). ஒட்டுமொத்த விற்பனை திருப்தி என வந்து விட்டால் 873 ஸ்கோருடன் (ஆயிரத்திற்கு) ஹூண்டாய் மோட்டார் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக மஹிந்திராவும் (872), மூன்றாவதாக டொயோட்டாவும் (854) வருகின்றன.
