420 குரல்களில் பேசும் மிமிக்ரி செந்தில் !

ஒவ்வொரு கூட்டத்திற்கு வித்தியாசமான விருந்தினர்களை அறிமுகப்படுத்தி அசத்தும் சென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தின் நிறுவனர் டாக்டர் சேகர்தான் இந்த முறையும் இவரை கூட்டத்தில் அறிமுகம் செய்துவைத்தார்.கையில் மைக்கை பிடித்தவர் அடுத்த முப்பது நிமிடத்திற்கு கூட்டத்தினரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்.நடிகர் விஜய் முதல் வைகோ வரையிலான பலரது குரல்களில் பேசி அசத்தினார், கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சம்பந்தப்பட்டவர்களே பேசுவது போல அச்சு அசலாக இருந்தது ஆனால் அத்தனை குரல்களிலும் நகைச்சுவை கலந்து இருந்ததால் வெடிச்சிரிப்பை வரவழைத்தது.கிங்காங் படத்தை தியேட்டரில் பார்த்தவர்களுக்கு தெரியும், அதிகம் திகில் ஊட்டியது கிளைமாக்ஸ் காட்சியில் ‛கிங்காங்’ என்ற மனிதகுரங்கு எழுப்பிய சப்தங்கள்தான் என்பது.அந்த சப்தங்கள் அனைத்தையும் ஒரே ஒரு மைக்கை வைத்துக்கொண்டு இவர் உருவாக்கிகாட்டி பார்வையாளர்களை மிரட்டிவிட்டார்.

இது போல பல்வேறு நிகழ்ச்சிகள், அவருக்கு கொடுக்கப்பட்ட முப்பது நிமிடங்களும் முப்பது வினாடிகளாக பறந்தது.மனதார அவரை பாராட்டி பேசியபோதுதான் ஒரு மனிதருக்குள் இவ்வளவு திறமையா? என வியக்கவும் வைத்தார்.அவர்தான் மிமிக்ரி செந்தில்.திருத்தணி பக்கம் உள்ள பொதட்டூர் பேட்டை என்ற சிற்றுாரில் பிறந்தவர் ஐந்து வயதில் போலியோ ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஒரு கால் ஊனமான மாற்றுத்திறனாளி.பெற்றோர்களின் பொறியாளர் கனவை நனவாக்குவதற்காக சென்னை வந்து பொறியாளர் படிப்பை படித்து முடித்தார் ஆனால் இவரது கனவு வேறு மாதிரியாக இருந்தது.ஒரு கலைஞனாக மேடை ஏறி மக்களை மகிழ்விக்கவைக்க வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாக இருந்தது அதற்கேற்ப கல்லுாரியில் படிக்கும் போதே தன்னை பட்டை தீட்டிக் கொண்டார்.படித்து முடித்தவுடன் படிப்பிற்குகேற்ற வேலையா? அல்லது மனதிற்கு பிடித்த மக்களை மகிழ்விக்கும் வேலையா? என்ற கேள்வி வந்த போது கொஞ்சமும் யோசிக்காமல் தன் மனதிற்கு பிடித்த இரண்டாவது வேலையை தேர்ந்து எடுத்தார்.

கொஞ்ச காலம் தன்னை பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்தவர் தற்போது ‛சாய் ஈவண்ட்ஸ்’ என்ற பெயரில் இருபதிற்கும் மேற்பட்ட கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார்.உலகம் முழுவதும் பயணம் செய்துள்ள இவருக்கு கலைமாமணி விருது உள்பட 175ற்கும் மேற்பட்ட விருதுகள் கிடைத்துள்ளன.இதுவரை 8700 மேடை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்
19 வருட பயிற்சி காரணமாக 420 குரல்களில் பேசக்கூடிய வல்லமை கொண்டுள்ளார்.பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை பலருக்கும் டப்பிங் வாய்ஸ் கொடுத்து வருகிறார் இதுவரை 1200க்கும் மேற்பட்ட மொழி மாற்றம் செய்யப்பட்ட ஆங்கில திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார்.
தான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் மாற்றுத்திறனாளி கலைஞர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களை மேடையேற்றி கவுரவம் சேர்க்கிறார்.வருடத்திற்கு ஓரு முறை முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகளை வைத்து கலை நிகழ்ச்சி நடத்துகிறார்.பட்ஜெட் எப்படி என்றாலும் பராவாயில்லை மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக உருவெடுத்துள்ள நம் மனதை மகிழ்விக்கும் மாற்றுத் திறனாளியான மிமிக்ரி செந்திலை தொடர்பு கொள்வதற்கான எண்:8072013725.