மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி ? உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் !

‘பேனர்’ மற்றும், ‘கட் அவுட்’ கலாசாரத்திற்கு முடிவு காணும் வகையில், சென்னை உயர் நீதிமன்றம், கிடுக்கிப்பிடி உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி, மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.

‘தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள, பேனர் மற்றும் கட் அவுட்டுகளை அகற்ற வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும், பேனர் அகற்றும் பணி வேகம் எடுத்துள்ளது.சென்னை, பூந்தமல்லி பஸ் நிலையம், டிரங்க் சாலை, கரையான்சாவடி, குமணன் சாவடி, குன்றத்துார் சாலை உள்ளிட்ட பகுதிகளில், பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள், பேனர் மற்றும் விளம்பர போர்டுகளை அகற்றினர்.

வேலுார் மாநகராட்சியில், அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த, 1,178 பேனர்கள் அகற்றப்பட்டன. ஈரோட்டில், 150க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத் தப்பட்டன. திருச்சியில், திருமண நிகழ்ச்சிக்கு, ஆர்டர் செய்திருந்த, பிளக்ஸ் பேனர்களை வாங்க கூட ஆட்கள் வரவில்லை. மேலும், திருச்சி நகரில், பேனர் வைத்தவர்களே, நேற்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வைக்கப்பட்டு இருந்த, பேனர்கள் அகற்றப்பட்டு, 81 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லுார், மேலப்பாளையம் என, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த, பேனர்கள் அகற்றப்பட்டன. டிஜிட்டல் பேனர்கள் கிழித்து அகற்றப்பட்டன.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திக்குளம், ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, 240 பேனர்கள் அகற்றப்பட்டன. மாநிலம் முழுவதும், பேனர்கள் அகற்றும் பணிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.