கடந்த 2013 ஆம் ஆண்டு சூது கவ்வும் படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது. நளன் குமாரசாமியின் முதல் படமான சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். சி வி குமார் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். வெறும் 2 கோடி பட்ஜெட்டில் உருவான சூது கவ்வும் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. அந்த சமயத்தில் இது ஒரு ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இந்நிலையில் 11 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றமே?
சூது கவ்வும் 2 படத்தை எஸ்.ஜே அர்ஜுன் எழுதி இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், எம் எஸ் பாஸ்கர், ராதாரவி, கருணாகரன், அருள் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இருப்பினும் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த யாருமே இந்த படத்தில் நடிக்கவில்லை. முதல் பாகத்தில் சிறிதளவு இருந்த பொலிட்டிக்கல் சட்டையர் இந்த பாகத்தில் முழுவதும் இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்தில் அமைச்சராக பொறுப்பேற்ற கருணாகரன் இந்த படத்தில் நிதியமைச்சர் ஆக இருக்கிறார், அடுத்த தேர்தலுக்காக 60 ஆயிரம் கோடி நிதியை கட்சிக்காக கொடுக்க இருந்த சமயத்தில் அடுத்தடுத்து சில சம்பவங்கள் நடைபெறுகிறது. மறுபுறம் சிறையில் இருந்து வெளிவரும் மிர்ச்சி சிவா பணத்திற்காக அனைவரையும் கடத்தி அதன் மூலம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார். சில பல குழப்பங்களுக்கு இடையில் இறுதியில் என்ன ஆனது என்பதே சூது கவ்வும் 2 படத்தின் ஒன் லைன்.
தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் எடுத்தால் வெற்றி பெறாது என்ற ஒரு நம்பிக்கை இருக்குது. அந்த நம்பிக்கையை உண்மையாக்கி உள்ளது சூது கவ்வும் 2 படம். 11 வருடங்களுக்கு முன்பு வெளியான சூது கவ்வும் படத்தை இப்போது பார்த்தாலும் பல காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். ஆனால் இந்த படத்தில் அப்படி சொல்லும் அளவிற்கு எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை. படத்தின் நாயகன் மிர்ச்சி சிவாவின் கதாபாத்திரம் ஒரு இடத்தில் கூட ஒட்டவில்லை. தினசரி குடிக்க வில்லை என்றால் அவர் கண்ணுக்கு அனைத்தும் பாம்பாக தெரியும் என்ற வினோத வியாதி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை வைத்து வரும் காமெடி கூட பெரிதாக ஒர்க் ஆகவில்லை.
கராத்தே கார்த்தி, யோக் ஜபி போன்ற கதாபாத்திரங்கள் படத்தில் எதற்கு வருகிறது என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளாக வாகை சந்திரசேகர், எம்எஸ் பாஸ்கர், ராதாரவி அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் அனைவரையும் தாண்டி கருணாகரன் மட்டுமே மொத்த படத்திலும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய கதாபாத்திரம் முதல் பாகத்தை போலவே சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. இயக்குனர் எஸ் ஜி அர்ஜுன் திரைக்கதையில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் முதல் பாகம் போல் இல்லை என்றாலும் நல்ல ஒரு படமாக வந்திருக்கும். இருப்பினும் அதனை தவற விட்டுள்ளார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. படம் முழுக்க இடம் பெற்றுள்ள சிஜி காட்சிகள் எதுவுமே ஒட்டவில்லை. ஒரு கார் ஓட்டும் காட்சியை கூட சிஜி செய்துள்ளனர். பொதுவாக மிர்ச்சி சிவா படங்களில் அவரது ஒன்லைனும், அவரது முக பாவனைகளும் நன்றாக இருக்கும். ஆனால் சூது கவ்வும் 2 படத்தில் அது கூட ஒர்க் ஆகவில்லை என்பது வருத்தமாகிறது.
மொத்தத்தில் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, தேவையில்லாத முன்பின் கதைகள் என முதல் பாகத்தின் மீது வைத்திருந்த அத்தனை மதிப்பையும் அடித்து நொறுக்கி விட்டு நம் நேரத்தைக் காலி செய்து விட்டது இந்த ‘சூது கவ்வும் 2’.