20 ஆண்டுகளில் இல்லாத அளவு பயணிகள் வாகனங்கள் விற்பனை 12.75 சதவீதம் சரிவு !

கடந்த ஆண்டில் பல மாதங்களாகவே மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வந்தது. விற்பனை சரிவால் வாகனத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக உற்பத்தி குறைப்பில் ஈடுபட்டு வந்தன. எனினும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை உயர்ந்ததால் நவம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், 2019 காலண்டர் ஆண்டில் கார்கள் உள்ளிட்ட பயணிகள் வாகனங்கள் விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து 29.50 லட்சமாக குறைந்து இருக்கும் என வாகனத் துறையைச் சேர்ந்தவர்கள் முன்னறிவிப்பு செய்து இருந்தனர். அதனை உறுதி செய்யும் விதத்தில் விற்பனை 12.75 சதவீதம் சரிவடைந்து 29.62 லட்சம் வாகனங்களாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்குப் பின் இந்த அளவு சரிவு ஏற்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். 1998-ம் ஆண்டில் ஏற்பட்ட 8 சதவீத சரிவிற்குப் பின் இதுவே பெரிய வீழ்ச்சி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டில் 33.90 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது ஏறக்குறைய 5 சதவீத வளர்ச்சியாக இருந்தது.

சென்ற ஆண்டில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 12 சதவீதம் குறைந்து 8,54,759-ஆக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் விற்பனை 14.19 சதவீதம் சரிவடைந்து 1.86 கோடியாக குறைந்துள்ளது. இதில் ஸ்கூட்டர் விற்பனை 16 சதவீதம் குறைந்து 58,41,259-ஆக சரிவடைந்து இருக்கிறது. மோட்டார்சைக்கிள் விற்பனை 13 சதவீதம் சரிந்து 1.20 கோடியாக குறைந்துள்ளது.2019-ஆம் ஆண்டில் அனைத்து வகை வாகனங்களின் விற்பனை, ஒட்டுமொத்த அளவில் 14 சதவீதம் குறைந்து 2.31 கோடியாக இருக்கிறது.