அதிகார பலம், பணபலம், பொய்ப் பிரச்சாரங்கள்..எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது! பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் காத்திரமானவை! காங்கிரசின் வெற்றிக்கான சூத்திரங்கள் நுட்பமானவை! இந்த தோல்வி பாஜகவிற்கு தேசிய அளவிலும், தமிழக அளவிலும் என்னென்ன பின்னடைவுகளைத் தரும்?

கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற தன் முழு பலத்தையும் பிரயோகித்தது பாஜக! பிரதமர் மோடி ஆறுமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததோடு தெருத்தெருவாக சென்று ஓட்டு கேட்டார்! உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து முழங்கினார்! தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பெருந்தலைகளின் பிரச்சாரம் எதுவுமே மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கின்ற ஹோதாவில் பாஜக இந்த தேர்தலில் செய்த அத்துமீறல்களும் கொஞ்ச, நஞ்சமல்ல!

அத்தனையையும் கடந்து குழப்பமில்லாத தெளிவான வெற்றியை மக்கள் காங்கிரஸுக்கு தந்துள்ளனர். பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன! காரணம், இந்த நான்கு வருட ஆட்சியில் பாஜக அரசு செய்த மிதமிஞ்சிய ஊழல்கள். குறிப்பாக 40 சதவிகித கமிஷன் கட்சி என்ற முத்திரை அந்த கட்சி மீது மிக வலுவாக குத்தப்பட்டுவிட்டது. இது அனுபவபூர்வமான உண்மை என்பது தான் இந்த பிரச்சாரத்தின் வெற்றியாக அமைந்தது! அத்துடன் பாஜகவின் சிறுபான்மையினருக்கு எதிரான அணுகுமுறைகள், வெறுப்பு பேச்சுக்கள், தாக்குதல்கள் ஆகியவற்றால் சமூக நல்லிணக்கம் கெடுவதை மக்கள் விரும்பவில்லை. பாஜக வந்தால் குடியுரிமை சட்ட திருத்தங்கள், சி.ஏ.ஏ ஆகியவை அமலாகும் என்று பகிரங்கமாக சொன்ன நிலையில் இந்த தோல்வியை மக்கள் பரிசளித்துள்ளனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது பாஜகவிற்கு ஒரு பாடமாகட்டும்.

ஊழல் ஆட்சி தந்த பாஜக முதலமைச்சர்கள்!
பாஜக அமைச்சரவையில் வெற்றிகரமாக வலம் வந்த சோமண்ணா, ஹாலப்பா ஆச்சார், பி.சி. நாகேஷ், கே.சி.நாராயண கவுடா, முருகேஷ் நிரானி, பி.ஸ்ரீ ராமலு, டாக்டர் சுதாகர், கோவிந்த் கார்ஜோள் ஆகிய பலரை மீண்டும் சட்ட சபைக்கு அனுப்ப மக்கள் விரும்பவில்லை.

காங்கிரஸ் பிரச்சாரங்கள் சீரிய முறையில் திட்டமிடப்பட்டன! காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றுமை ஒரு சிறப்பம்சம்! ராகுல் காந்தியின் பாரத யாத்திரையும், தற்போதைய பிரச்சாரங்களும் நல்ல பலனை தந்துள்ளன! அத்துடன் தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில் அங்கு செய்த வியூகங்கள், களப் பணிகள் போன்றவையும் இந்த வெற்றிக்கு பங்களித்துள்ளன!

கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத வண்ணம் குழப்பமான தீர்ப்பை மக்கள் தந்து வந்தனர். இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தயவில்லாமல் காங்கிரசோ, பாஜகவோ ஆட்சி அமைக்க முடியாத நிலைமை உருவாவதும், அந்த சூழலை பயன்படுத்தி சிறிய கட்சியில் தலைவரான குமாரசாமி முதல் அமைச்சராகி ஆடாத ஆட்டம் போடுவதும் வாடிக்கையாக இருந்தது!

இன்றைக்கு காலை ஓட்டு எண்ண ஆரம்பிக்கும் முன்பு குமாரசாமி பேசிய பேச்சு இருக்கே.. அப்பப்பா…! ”எங்கள் ஆதரவு வேண்டுமென்றால், முதல்-மந்திரி பதவியுடன், நீர்ப்பாசனம், பொதுப்பணித்துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் எந்த கட்சி மேலிடமும், தலைவர்களும் தலையிடக் கூடாது. கூட்டணி ஆட்சியில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கக் கூடாது. எந்த கொள்கை முடிவையும் எடுக்க தடை இருக்க கூடாது…” என்றெல்லாம் ஆணவத்தோடு பேசினார். அந்தப்படி பேசிய குமாரசாமியின் மகனையே மக்கள் தோற்க வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் என்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. குமாரசாமியே திக்கித் திணறித் தான் வென்றார்!

போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த லட்சுமண் சவதி, அத்தாணி தொகுதியில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி – தார்வாட் மத்தி தொகுதியில் தோல்வி அடைந்தார். பாஜகவின் முகமாக மக்கள் மனதில் நீண்ட நெடுங்காலமாக பதிந்து போன ஜெகதீஸ் ஷெட்டரை மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக ஏற்கவில்லை.

கர்நாடகாவில் 25 முதல் 30 தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இந்த தொகுதிகளில் பாஜக பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஏற்பாடு செய்த நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அதை அடாவடியாக பாதியிலேயே நிறுத்தினார் ஈஸ்வரப்பா! அதை அமைதியாக இருந்து ஆதரித்தார் அண்ணாமலை! அதற்கான விலையை தமிழ் மக்கள் பாஜகவிற்கு தேர்தல் மூலமாக தந்துவிட்டனர்!

கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள வெற்றியானது தேசிய அளவில் அந்தக் கட்சிக்கு ஒரு பெரும் புத்துணர்வை தந்துள்ளது. பாஜக வீழ்த்த முடியாத கட்சியல்ல என்ற நம்பிக்கையை இந்த வெற்றி காங்கிரஸாருக்கு தந்திருக்கிறது. அதுமட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளும் மனோ திடத்தையும் இந்த வெற்றி பெற்றுத் தந்துள்ளது. தமிழகத்திலுமே கூட காங்கிரஸுக்கு ஒரு மரியாதையை இந்த வெற்றி ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். காங்கிரசை அவ்வளவு சுலபத்தில் அலட்சியப்படுத்த முடியாது என்று திமுகவிற்கு உணர்த்தியிருக்கும். பாஜகவிற்கு ரொம்ப பயப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை அதிமுகவிற்கும் இந்த வெற்றி உணர்த்தி இருக்கும். தற்போதைய நிலவரப்படி, தென்னிந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக ஆட்சி கிடையாது!

காங்கிரஸ் ஒன்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சியல்ல என்பது மக்களுக்கும் தெரியும். ஆனால், பாஜகவை போல ஆபத்திலாத கட்சி என்பது தான் மக்களின் பார்வையாக உள்ளது. பாஜகவின் மீதான அதிருப்தியும், காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளும் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளன! இஷ்டத்திற்கு இலவசங்களை அறிவித்து வெற்றி பெற்றுள்ள காங்கிரசுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது என்பது மிகப் பெரிய சவாலாகும்.

இருவரில் யார் முதல்வருக்கு தகுதியானவர்?

அறிவிக்கட்ட இலவசங்களை அமல்படுத்த கஜானாவில் பணம் இருக்குமா தெரியாது. ஆனால், ஊழலற்ற நிர்வாகத்தை சாத்தியப்படுத்த முடியுமானால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டுக்கு செல்லும் பணத்தை தடுக்க முடிந்தால் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றிவிடலாம். இதற்கான நேர்மையும், நெஞ்சுரமும் காங்கிரசுக்கு இருக்கிறதா என்று போகப் போகத் தான் தெரியும்.

சிவகுமார், சித்தராமையா; ஒற்றுமை தொடருமா?
உள்கட்சி சண்டைகள் இல்லாத சுமுகச் சூழலை சாத்தியப்படுத்த வேண்டிய அவசியத்தை காங்கிரஸ் உணர வேண்டும். குறிப்பாக சித்தாராமையாவும், சிவகுமாரும் விட்டுக் கொடுத்து செயல்படுவதில் தான் காங்கிரசின் வெற்றி அடங்கியுள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இந்த வெற்றி சாத்தியமாகி இருப்பதை சோனியாவும், ராகுலும் சரியானபடி உணர்ந்து கொள்வார்கள் என நம்புவோமாக!

Related posts:

11 கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் " சிறகன் " ஏப்ரல் 20 ம் தேதி வெளியாகிறது !
நல்ல காலம் பொறக்குது ! உடன்பிறப்புகளுக்கு நல்ல காலம் பொறக்குது !!
உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள 'ஹரா' திரைப்படம் !
தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சை!
உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !
லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக். !
’தி அக்காலி’ -- விமர்சனம் !
பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !