விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம் !

விஜய்சேதுபதி புரொடக்சன், 7Cஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் ‘லாபம்’.விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடமாகவே கட்டச்சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லி இருக்கிறார் விஜய்சேதுபதி.

அந்த ஊரில் லாபம் படப்பிடிப்பு நடந்ததால் தங்களுக்கும் லாபம் என ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறுகையில்,”என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது.நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான் பிரிட்டிஷ்காரன் இங்கே 300 வருடம் டேரா போட்டான்.விவசாயத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கொண்ட நம் நாடு ஏன் இப்போது நலிவைச் சந்தித்தது ?. தினமும் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது எதனால், என்பதை என்னுடைய ஸ்டைலில் இப்படத்தில் சொல்லி இருக்கிறேன்.இன்று விவசாயிகளுக்கு இருக்கும் பிரச்சனை சர்வதேச பிரச்சனை. அதை படம் விரிவாகப் பேசும்.

இப்படத்தில் நாயகன் விஜய்சேதுபதி, நாயகி ஸ்ருதிஹாசன். மேலும் தெலுங்கு சினிமாவில் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளரின் மகன் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார்.கலையரசன், பிரித்வி, டேனி என இன்றைய இளம் நடிகர்களும் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்,” என்றார்.
டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.இறுதிக் கட்டப் படப்பிடிப்பு மிக வேகமாகவும், மிகப் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது.