விஜய்-யின் அரசியல் பிரவேசம் எப்போது?

தமிழக அரசியல்களம் ரொம்பவே வித்தியாசமானது.முழு நேர அரசியல்வாதிகள் தவிர, திரையுல நட்சத்திரங்களும் இங்கு அவ்வப்போது படையெடுப்பதுண்டு. சுதந்திர போராட்ட காலம் தொட்டு தமிழக அரசியலில் நட்சத்திரப் படையெடுப்பு இருந்தாலும், எம்ஜிஆரின் விஸ்வரூப வளர்ச்சிக்குப் பின்னர்தான் இதன் வேகம் அதிகமானது.எம்ஜிஆரின் புகழுக்கு சினிமா கவர்ச்சி ஒரு முக்கிய காரணம் என்றபோதிலும் அவரது நீண்டகால அரசியல் தொடர்பும், நடவடிக்கைகளும் வெற்றிக்கு அடித்தளமிட்டது மறுக்க முடியாத உண்மை.இதைப் புரிந்துகொள்ளாமல் எம்ஜிஆரை பார்த்து சூடுபோட்ட ‘நட்சத்திர பூனைகள்’ அநேகம் உண்டு.சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் என இந்த பட்டியல் நீளும். இதில் விஜயகாந்த் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கானவர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அளவிற்கு உயர்ந்தும், உடல்நலக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்தக்கட்டத்திற்கு அவரால் செல்ல இயலவில்லை.

எதிர்கால முதல்வர் கனவில் மிதக்கும் நட்சத்திர பட்டியலில் நடிகர் விஜய்க்கு தனியிடம் உண்டு. ஆரம்பத்தில் பிளேபாய் வேடங்களில் நடித்துவந்த விஜய், பின்னர் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கத் தொடங்கினார்.அந்த காலக்கட்டத்தில்தான் தந்தை இயக்குநர் சந்திரசேகரின் வழிகாட்டுதலில் அரசியல் பிரவேசத்திற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. பல படங்களில் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றி அநீதியை எதிர்க்கும் நல்லவராக விஜய் முன்னிறுத்தப்பட்டார். ரஜினி பாணியில் பஞ்ச் டயலாக்குகளையும் தெறிக்கவிட்டார்.

இதனால் மற்ற நடிகர்களுக்கு இல்லாத அளவிற்கு விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை பெருகியது. ரசிகர் மன்றங்களை அமைப்பு ரீதியாக பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன.சினிமாவில் வெறும் வசனம் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல் களத்திலும் பல நேரங்களில் கால் பதித்தார் விஜய்.இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு யாரும் அறியாத வகையில் நேரில் ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டார். நீட் அரக்கனுக்கு பலியான மாணவி அனிதா குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதுபோலவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார்.

மக்களின் நாடித்துடிப்பிற்கேற்ப காய் நகர்த்தி வந்த விஜய்க்கு, அதிகாரத்திலிருப்பவர்களுடன் பல நேரங்களில் மோதல்களும் ஏற்பட்டதுண்டு.பட உரிமை தொடர்பாக சன் டிவியுடன் எழுந்த பிரச்சனையால் தந்தை சந்திரசேகருடன் ஜெயலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார் விஜய். பின்னர் தலைவா படத்தில் இடம்பெற்ற சில வசனங்களுக்காக ஜெயலலிதாவின் கோபப் பார்வைக்கு ஆளானதும், அந்த படம் பல சிக்கல்களை சந்தித்ததும் திரையுலகினர் பலருக்கும் தெரியும்.இதேபோல மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றிற்கு எதிராக வசனங்கள் இடம்பெற்றிருந்த காரணத்தால் மத்தியில் ஆளும் பாஜகவினரின் அதிருப்தியை சம்பாதித்தார். எனினும் பாஜகவினரின் அந்த எதிர்ப்பே இலவச விளம்பரமாக மாறி, மெர்சல் படத்திற்கு மகத்தான வெற்றியை தந்தது தனிக்கதை.

ஜெயலலிதா, கலைஞர் இல்லாத தமிழக அரசியல் களத்தில் மகன் விஜய்யை உடனடியாகக் களமிறக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர் சந்திரசேகரின் திட்டம்.”விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது, அவருக்கு என்ன தகுதிக் குறைச்சல்? ” என அண்மையில் அவர் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பினார்.எனினும் ‘ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ‘ என்பதை தனது அரசியல் எண்ட்ரி விவகாரத்தில் பின்பற்ற விஜய்க்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.ஓரளவிற்கு காங்கிரஸ் ஆதரவு மனநிலை கொண்ட விஜய், முன்பு ஒரு கட்டத்தில் அந்த கட்சியில் சேரவும் விரும்பினார். டெல்லி சென்று ராகுல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். எனினும் பல்வேறு காரணங்களால் அது கைகூடாமல் போயிற்று.”மத்தியில் ஆளும் பாஜக, தனது கைவசமுள்ள அத்தனை அஸ்திரங்களையும் உபயோகித்து ஆக்டோபசாக எல்லோரையும் விழுங்க எத்தனித்து வரும் நிலையில் மாற்று முகாமிற்கு செல்வதில் உள்ள ஆபத்துக்களை விஜய் நன்றாகவே உணர்ந்துள்ளார் என்கிறார்கள்” அவருக்கு நெருக்கமானவர்கள்.

திரைப்படங்களில் புயல் வேகத்தில் ஆக்‌ஷன் அதிரடிகளை அரங்கேற்றும் விஜய், தனது அரசியல் பிரவேசத்தை, நிதானமாக நடைமுறைப்படுத்த முடிவெடுத்திருக்கிறார் என்பதுதான் இப்போதைய நிலவரம்.