வாடிக்கையாளர்களை ஏமாற்ற கார் டீலர்கள் என்னென்ன தந்திரங்களை செய்கின்றனர் என தெரியுமா? அந்த தில்லுமுல்லுகளை இந்த செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளோம். புதிய கார் வாங்குவது என்பது, ஒருவர் தன் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்வதே இதற்கு காரணம். பொதுவாக எந்த காரை வாங்க போகிறோம்? என்பதை முடிவு செய்த பின், டீலர்ஷிப் பணியாளர்களிடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது நல்லது. ஏனெனில் நீங்கள் காரை தேர்வு செய்த பின் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக அவர்கள் சில தந்திரங்களை செய்வார்கள். இதனை நீங்கள் கவனமாக கையாளாவிட்டால், காரின் உண்மையான விலையை விட அதிக தொகையை கொடுக்க வேண்டியதாக இருக்கும். எனவே கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக, கார் டீலர்கள் செய்யும் தந்திரங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் உள்ள கார் டீலர்ஷிப்களில் அரங்கேற்றப்படும் அதிர வைக்கும் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாப்பதுடன், கடினமான உழைப்பின் மூலம் நீங்கள் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை சேமிக்கவும் இந்த தகவல்கள் உதவும் என நம்புகிறோம். கூடுதல் கட்டணங்கள்: பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் எக்ஸ் ஷோரூம் விலையைதான் சொல்வார்கள். அதாவது ஷோரூமுக்கு உள்ளே எவ்வித வரிகளும் இல்லாமல் காரின் விலை. ஆனால் அந்த காரை சட்டப்பூர்வமாக பதிவு செய்து ஓட்டுவதற்கு பதிவு கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணங்களை நீங்கள் செலுத்தியாக வேண்டும். அது ஓகேதான். ஆனால் புதிய கார்களை வாங்கும்போது இன்னும் பல்வேறு வகையான கட்டணங்களை உங்கள் மீது டீலர்கள் திணிப்பார்கள். இதில், ஹேண்ட்லிங் சார்ஜ் என்பதும் ஒன்று. இது முழுக்க முழுக்க சட்ட விரோதமானது. உங்கள் மீது ஹேண்ட்லிங் சார்ஜ் திணிக்கப்பட்டால், நீங்கள் கண்டிப்புடன் அதற்கு ‘நோ’ சொல்ல வேண்டும். ஹேண்ட்லிங் சார்ஜ்களை பல்வேறு நீதிமன்றங்கள் சட்ட விரோதம் என கூறியுள்ளன. டெமோ கார்கள் உங்கள் தலையில் கட்டப்படலாம்: அனைத்து டீலர்ஷிப்களிலும் டெமோ கார்கள் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக அவை வைக்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கும் இந்த கார்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. அதே சமயம் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அல்லது புதிய மாடல் மார்க்கெட்டிற்கு வந்துவிட்டால், அவை அப்புறப்படுத்தப்பட்டு விடும். இதுதான்… பெருமைப்பட வேண்டிய விஷயம். அந்த சமயத்தில் ஒரு சில டீலர்கள் மிகப்பெரிய தள்ளுபடியை கொடுத்து அந்த காரை விற்பனை செய்து விடுவார்கள். ஆனால் வேறு சில டீலர்களோ, அந்த காருக்கு புதுப்பொழிவு கொடுத்து புதிய கார் என்ற போர்வையில் அதனை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டி விடுகின்றனர். டெமோவிற்கு நிறுத்தப்பட்ட கார்களின் ஸ்கிராட்களை மறைப்பதற்காக காரின் பாடிக்கு டீலர்கள் பெயிண்ட் செய்கின்றனர். ஒருவேளை அவை டெஸ்ட் டிரைவிற்கு பயன்படுத்தப்பட்டிருந்தால், ஓடோமீட்டரில் தில்லுமுல்லு செய்து அது புதிய கார் என வாடிக்கையாளர்களை நம்ப வைத்து விடுகின்றனர். எனவே நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தி காரை பார்வையிட்டால் மட்டுமே இந்த மோசடியில் இருந்து தப்ப முடியும். இல்லாவிட்டால் பழைய காரை உங்கள் தலையில் கட்டி விடுவார்கள்.
டேஷ்போர்டு மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ஸ்கிராட்ச்கள் இருக்கிறதா? என நீங்கள் சோதித்து பார்க்கலாம். அதே சமயம் இருக்கைகள் மற்றும் பெடல்களின் நுனிகளை உற்று நோக்கினால், ஏதேனும் சேதாரங்கள் உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். அது பழைய காரா? அல்லது புதிய காரா? என்பதை இதன் மூலம் நீங்கள் தீர்மானித்து கொள்ளலாம். கட்டாய ஆக்ஸஸரீஸ்கள்: கார் டீலர்ஷிப்கள் கையாளும் முக்கியமான தந்திரங்களில் ஒன்று கட்டாய ஆக்ஸஸரீஸ்கள். அதாவது இந்த கட்டாய ஆக்ஸஸரீஸ்கள் இல்லாமல் கார்களை டெலிவரி செய்ய முடியாது என டீலர்ஷிப் பணியாளர்கள் கூறுவார்கள். ஆனால் டீலர்களிடம் இருந்துதான் ஆக்ஸஸரீஸ்களை வாங்க வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இல்லை. ஆக்ஸஸரீஸ்கள் கொஞ்சம் விலை உயர்ந்த தயாரிப்புகள். அதனை பல்வேறு வழிகளில் உங்கள் தலையில் கட்ட டீலர்கள் முயல்வார்கள். இதுபோன்ற ஆக்ஸஸரீஸ்களை வாங்குவதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக புதிய கார் வாங்கும்போது இதனை கட்டாயம் செய்யாதீர்கள். அதற்காக ஆக்ஸஸரீஸ்களை வாங்கவே வேண்டாம் என சொல்லவில்லை. முதலில் ஆக்ஸஸரீஸ்களை புரிந்து கொள்ளுங்கள். அது நமக்கு பலன் அளிக்கும் என உங்களுக்கு தோன்றினால் மட்டும் அவற்றை வாங்குங்கள். இல்லாவிட்டால் டீலர்களின் தந்திரத்திற்கு இரையாகி உங்கள் பணம் வீணாக கரைய கூடிய அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
கார் டீலர்களின் மோசடி குறித்த மேற்கண்ட தகவல்கள் உங்களுக்கு பயன் அளித்திருக்கும் என நம்புகிறோம். இதேபோல் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் ஒரு சில ரகசியங்களை தெரிந்து கொள்வதை கார் டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்கள். அந்த ரகசியங்களை எல்லாம் தொடர்ந்து பார்க்கலாம். இன்றைய சூழலில் கார்கள் இல்லா உலகை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. ஒரு காலத்தில் ஆடம்பரமாக கருதப்பட்டு வந்த கார்கள் தற்போது உணவு, உடை மற்றும் இருப்பிடம் போல் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறி விட்டன. தற்போதைய நவ நாகரீக யுகத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு காராவது இருப்பது அவசியமாகிறது. எனவே சொந்தமாக புதிய கார் வாங்குவது என்பது தற்போது பலருக்கும் வாழ்நாள் லட்சியமாக மாறியுள்ளது. இதை எட்டுவதற்காக பலரும் கடினமாக உழைக்கின்றனர். சிறுக சிறுக சேமித்து வைக்கின்றனர். சொந்த வீட்டிற்கு அடுத்தபடியாக ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் செய்யும் இரண்டாவது மிகப்பெரிய முதலீடு கிட்டத்தட்ட காராகதான் இருக்கும். ஆனால் புது கார்களை வாங்கும்போது, டீலர்கள் உங்கள் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கலாம். எனவே டீலர்களிடம் இருந்து தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு போன்ற சலுகைகளை பெறுவது எப்படி? என்ற சூட்சமங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் கணிசமான பகுதியை சேமிக்க முடியும். ஆனால் இந்த ரகசியங்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வதை டீலர்கள் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்கள். எனினும் உங்களுக்கு பலன் அளிக்கும் விதமாக டீலர்களிடம் இருந்து சலுகைகளை பெறுவது எப்படி? என்பது தொடர்பான டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். புதிய காரை வாங்கும்போது இவை நிச்சயமாக உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக புதிய கார்களை வாங்க செல்வதற்கு என ஒரு நேரம் உள்ளது. ஒரு மாதத்தின் கடைசி வாரம்தான் அது. கார் டீலர்ஷிப்களில் பணியாற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கு கண்டிப்பாக ‘சேல்ஸ் டார்க்கெட்’ இருக்கும். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலக்கை எட்டுவதற்காக மாத கடைசியில் அவர்கள் மிக தீவிரமாகவும், வேகமாகவும் பணியாற்றுவார்கள்.
அந்த சமயத்தில் புதிய காரை வாங்க சென்றால், உங்களுக்கான ஆஃபர்களை எளிதாக அதிகரித்து கொள்ள முடியும். எனவே மாத கடைசியை குறி வைத்து கார் டீலர்ஷிப்களுக்கு செல்லுங்கள். இதுதவிர புதிய கார் வாங்கும்போது கொஞ்சம் சிரமப்படாமல் பல்வேறு டீலர்களுடன் தொடர்பில் இருப்பது உங்களுக்கு கண்டிப்பாக நன்மை பயக்கும். உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள டீலர்ஷிப்பிற்கு செல்வது என்பது எளிதான காரியம்தான். இருந்தாலும் கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட்டு மேலும் ஒரு சில ஷோரூம்களுக்கும் செல்லுங்கள். ஏனெனில் ஒவ்வொரு டீலர்ஷிப்பும் தங்கள் அளவில் வித்தியாசமான டீல்களை வாடிக்கையாளர்களுக்காக வைத்திருப்பார்கள். அவை கேஷ் டிஸ்கவுண்ட் உள்பட பல்வேறு தள்ளுபடிகளாக இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு டீலருடன் நீங்கள் தொடர்பில் இருந்தால், அவற்றை இழக்க நேரிடலாம். ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் கார்ப்பரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஆக்ஸஸெரீஸ்கள் உள்ளிட்ட ஆஃபர்கள் தொடர்பாக விசாரித்து வைத்து கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அடுத்தபடியாக குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இருக்கும் டீலர்ஷிப்களை குறி வையுங்கள். பொதுவாக முக்கியமான இடங்களில் செயல்பட்டு வரும் டீலர்ஷிப்களுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் செல்வார்கள். அவர்களிடம் நீங்கள் கறாராக அடித்து பேசி ஆஃபர்களை பெறுவது கொஞ்சம் சிரமமான காரியம். அதே சமயம் சிறிய மற்றும் அதிகமாக வெளியில் தெரியாத டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்கள் செல்வது மிகவும் குறைவாகதான் இருக்கும். இதனால் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அவர்கள் அதிகப்படியான ஆஃபர்களை வழங்குவார்கள்.
எனவே சிறிய டீலர்ஷிப்களில் ஒருவேளை உங்களுக்கு அதிகமான ஆஃபர்கள் கிடைக்கலாம். பொதுவாக பேரம் பேசுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள ஆளே கிடையாது. எக்காரணத்தை கொண்டும் நமது இந்த பெருமையை விட்டு விடாதீர்கள். உங்களுக்கு ஒரு டீலரிடம் இருந்து கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது இலவச ஆக்ஸஸெரீஸ்கள் அல்லது இன்சூரன்ஸ் உதவி போன்ற ஆஃபர்கள் கிடைத்தால், அதை மற்ற டீலர்ஷிப்புடன் ஒப்பிட்டு பாருங்கள். மற்ற டீலர்கள் உங்களுக்கு வழங்க தயாராக உள்ள ஆஃபர்களை உங்கள் டீலரிடமும் தெரியப்படுத்துங்கள். உங்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்க இது உதவி செய்யும். உங்களுக்கான சலுகைகளை அதிகரித்து கொள்ள மற்றொரு தந்திரமும் உள்ளது. டீலர்ஷிப் மற்றும் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் முடிவு செய்யப்பட்ட உடனேயே காரை முன்பதிவு செய்து விடாதீர்கள். அதற்கு பதிலாக ஓரிரு நாட்கள் காத்திருங்கள். டீலர்ஷிப் தரப்பில் உங்களுக்கான சலுகைகளை அதிகரித்து கொள்வதற்கான வாய்ப்பை இது கண்டிப்பாக ஏற்படுத்தும். நீங்கள் வேறொரு டீலரிடம் சென்று விட கூடாது அல்லது மனம் மாறி விட கூடாது என்பதே இதற்கு காரணம். இங்கே வழங்கப்பட்டுள்ள டிப்ஸ்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று மாத கடைசியில் இன்னும் நன்றாக வேலை செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.