வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாக இருக்கும்.
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது.
இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் (15 லட்சம் ரூபாய்க்கு) 750 ரூபாயாகும். முன்னர் இது இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது.
15 லட்சம் ரூபாய்க்கு மேல் பாலிசி தொகையை விரும்புபவர்கள், அதிக தொகையிலான பிரீமியத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ எனப்படும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (The Insurance Regulatory and Development Authority of India – IRDAI) தெரிவித்துள்ளது.