வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணிக்கப்பட வேண்டும் ? ஆடிட்டர்கள் கோரிக்கை !

வருமானவரித் துறை அதிகாரிகளைக் கண்காணித்து அவர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டுமென பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் ஒருமித்த கோரிக்கையை வைத்துள்ளனர்.

வருமானவரி வசூல் இந்த நிதி ஆண்டில் இலக்கை எட்டவில்லை. எனவே, மத்திய நேரடி வரிகள் ஆணையம், வரி வசூலை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனால், வருமானவரித் துறை அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின்படி மட்டுமே அவர்களுடைய நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள ஆடிட்டர்கள் பிரதமர் மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

2018-19 நிதி ஆண்டில் வருமான வரி வசூல் இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரி வசூல் இலக்கு 85.1 சதவீதம் மட்டுமே எட்டப்பட்டுள்ளது. அதாவது ரூ. 10.21 லட்சம் கோடி மட்டுமே வசூல் ஆகியிருக்கிறது. சுமார் 15 %வரி வசூல் குறைந்துள்ளது. சில தினங்களில் நிதி ஆண்டு முடியப் போகிறது என்பதால், வருமான வசூல் இலக்கை எட்டுவது கடினம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் சில தினங்களுக்கு முன் கவலை தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து அனைத்து வருமானவரித் துறை அதிகாரிகளுக்கும் வரி வசூலை அதிகப்படுத்துவதற்கான, பழைய வரி பாக்கிகளை வசூல் செய்வதற்கான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த உத்தரவு வரி செலுத்துவோரிடமும், ஆடிட்டர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாகவே வருமானவரித் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இந்தியாவின் காவலன் எனச் சொல்லிக்கொள்ளும் பிரதமர், வரி செலுத்துவோருக்கு நண்பன் எனச் சொல்லிக்கொள்ளும் அரசு தங்களை வருமான வரித் துறை அதிகாரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என ஆடிட்டர்கள் பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.