வரி ஏய்ப்பு செய்துவிட்டு தப்ப முடியாது! இன்று முதல் புதிய விதிகள் அமல்

கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் வைத்திருப்போருக்கு நெருக்கடி.13 விதமான வரி ஏய்ப்புகள் பற்றி மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கியுள்ளது.வரி ஏய்ப்பு செய்தவர்கள் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டாலும் அந்தப் பிரச்னையிலிருந்து தப்ப முடியாத அளவுக்கு கடுமையான புதிய விதிகள் இன்று அமலுக்கு வருகின்றன.வருமான வரித்துறை சார்பில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூன் 17ஆம் தேதி முதல் வருமான வரி ஏய்ப்பு குறித்த புதிய விதிகள் அமலாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வரி செலுத்தாமல் தாமதித்தவர்கள் வருமான வரித்துறையின் எச்சரிக்கைக்கு நோட்டீஸ் பெற்ற பின்பு, வரியை வட்டி மற்றும் அபராதத்துடன் செலுத்தினாலும் அத்துடன் சிக்கலிலிருந்து தப்ப முடியாது. இதற்காக புதிய விதிகளில் கருப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துக்கள் குறித்த முக்கியமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டு பிரிவுகளில் 13 விதமான வரி ஏய்ப்புகளைச் சுட்டிக்காட்டி அவை தொடர்பான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கியுள்ளது.

முதல் பிரிவு (category ‘A’) பாகம் XVII-B -ன் கீழ் வரி (tax deducted at source) செலுத்தாமல் இருப்பது அல்லது பிரிவு 115-0 -ன் கீழ் வரி செலுத்தாமல் இருப்பது பற்றிய விதிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பிரிவில் (category ‘B’) வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்ய முயல்வது, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது, சரிபார்ப்பின்போது தவறான தகவல்களை அளிப்பது போன்றவை அடங்கியுள்ளன.