வட இந்திய நகரங்களை விட சென்னையில் ரியல் எஸ்டேட் அபார வளர்ச்சி !

வீடுகள் விற்பனையில் டெல்லி உட்பட பல வட இந்திய நகரங்களைவிட சென்னை மிகவும் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஓராண்டில் வீடுகள் விற்பனை 77% உயர்ந்துள்ளது எனவும் 2017ஆம் ஆண்டு 38,330 யூனிட் விற்படை நடைபெற்ற நிலையில் 2018ஆம் ஆண்டில் 67,850 யூனிட் விற்கப்பட்டிருக்கிறது எனவும் ரியல் எஸ்டேட் ஆலோசனைகள் வழங்கும் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பேசியுள்ள அனராக் நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்தோஷ் குமார், “2018ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறை ஏற்ற இறக்கங்களுடனேயே முடிந்தது. ரியல் எஸ்டேட் துறை கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கம் நாளுக்குநாள் குறைந்து வந்திருக்கிறது. தற்போது ரியல் எஸ்டேட் துறை மீண்டும் வளர்ச்சி அடைவதற்கான அறிகுறி தெரிகிறது.” என்றார்.குடியிருப்புகள் மட்டுமின்றி சிறு வணிகம் மற்றும் தொழில் அலுவலகப் பிரிவிலும் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய தென்னிந்திய நகரங்களில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. குடியிருப்பு விற்பனையில் இந்த நகரங்கள் 20% வளர்ச்சியை அடைந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் மேற்கு நகரங்கள் 15% முதல் 18% வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளன.

தென்னிந்திய நகரங்களில் விற்கப்படாமல் மிச்சம் இருப்பவை 19% யூனிட்டுகள் மட்டுமே. ஆனால், டெல்லி என்.சி.ஆர். பகுதியில் மட்டுமே 28% விற்பனை ஆகவில்லை. தென்னிந்திய நகரங்களில், அலுவலகம் தொடர்பான ரியல் எஸ்டேட் விற்பனை 21 மில்லியன் சதுர அடியாக உள்ளது. டெல்லியில் இப்பிரிவில் மொத்தமாகவே 6 மில்லியன் சதுர அடி மட்டுமே விற்கப்பட்டிருக்கிறது.