மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இந்த நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 30 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், விவோ உள்ளிட்டவை வருகின்றன. இதனிடையே நம் இந்திய மாணவர்கள் தங்கள் போனுக்கு வரும் எந்த தகவல்களையும் தவற விட்டுவிடகூடாது என்ற பதற்றம், மாணவர் கள் மத்தியில் அதிகம் காணப்படு கிறது. இதன் காரணமாக, அவர்கள், தினமும், 150 முறைக்கும் மேல், தங்கள் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்கும் பழக்கத்துக்கு ஆளாகி மொபைல் அடிமையாகி உள்ளனர் என்று ஓர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம் மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றம் சார்பில் ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கும் இந்திய மாணவர்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களை சார்ந்திருத்தல், இன்ப நாட்டவியல் கோட்பாடு மற்றும் டிஜிட்டல் இந்தியாவின் புதுமையான முயற்சிகளின் விளைவுகள் என்னும் தலைப்பில் நடந்த ஆய்வில் 20 மத்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த 200 கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.இந்த ஆய்வின் முடிவில் பயம் கலந்த எதிர்பார்ப்பு, தகவல்கள் காணாமல் போகும் பயம் போன்ற காரணங்களால் இந்திய மாணவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 150க்கும் அதிகமான முறை தங்களது ஸ்மார்ட் போன்களை சரிபார்த்து கொள்வதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த செயல்பாடு மாணவர்களின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திட்ட இயக்குனர் முகமது நவீத் கான் கூறுகையில்,“நம் நாட்டில், 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள், மொபைல் போன் பயன்படுத்து கின்றனர். அதிலும், பெரும்பாலானோர், ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். தங்களுக்கு தேவையான , ‘ஆப்ஸ்’ எனப்படும் செயலிகளை பதிவிறக்கம் செய்து, கம்ப்யூட்டருக்கு மாற்றாக அதை பயன்படுத்துகின்றனர். மாணவர்களில், 26 சதவீதத்தினர் மட்டுமே, மொபைல் போனை, பேசுவதற்காக பயன்படுத்துகின்றனர்.மற்றவர்கள், சமூக வலைதளங்கள் பார்க்க, கூகுள் தேடு தளங்கள் பயன்படுத்த, திரைப்படங்கள் பார்க்க, மொபைல் போன்களை பயன்படுத்துகின்றனர். வெறும்,14 சதவீத மாணவர்கள் மட்டுமே, மொபைல் போன்களை, ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரத்துக்கும் குறைவாக பயன்படுத்துகின்றனர். 26 சதவீத மாணவர்கள் மட்டுமே தங்களது அழைப்புகளுக்கு பதிலளிக்க ஸ்மார்ட் போன்களை உபயோகிக்கின்றனர். ர்” என்று கூறினார்.

மேலும்“63 சதவீத மாணவர்கள் 7 மணி நேரமும், 23 சதவீத மாணவர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக ஸ்மார்ட் போன்களை உபயோகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியிருக்கும் கல்லூரி மாணவர்களை நிலையைக் குறித்து ஆராயவே அலிகார் முஸ்லீம் பல்கலைகழகம், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது” எனக் முகமது நவீத் கான் தெரிவித்தார்