முட்டை சாப்பிடுவது, நம் உடல்நலனுக்கு நல்லதா கெட்டதா என்று பல ஆண்டுகளாக வல்லுநர்கள் விவாதித்து வருகின்றனர்.இதற்கு பதில், நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்தது. JAMA மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட புதிய மருத்துவ ஆய்வு இதனை கண்டுபிடித்துள்ளது.ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது, இதய நோய் மற்றும் முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கும் அதிகளவிலான கொழுப்பு. பெரிய முட்டை ஒன்றில் சுமார் 185 மில்லிகிராம் கொழுப்பு இருக்கும் என அமெரிக்காவின் விவசாயத்துறை கூறுகிறது. நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் கொழுப்பை உட்கொள்ளலாம் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது.
17 ஆண்டுகளில் 30,000 பேர் பங்கேற்ற ஆறு ஆய்வுகள் செய்யப்பட்டன.நாள் ஒன்றுக்கு 300 மில்லிகிராம் எடுத்துக் கொள்வது, இதய நோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் அளவிற்கும், முன்கூட்டியே மரணம் ஏற்படுவதை 18 சதவீதம் அளவிற்கும் உயர்த்தியதாக ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தனர்.முட்டைகளை பொறுத்தவரை, ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டைகள் எடுத்துக்கொண்டால், இருதய நோய் ஏற்படும் அபாயம் 6 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டுபிடிப்பட்டுள்ளது. அதே போல, இது முன்கூட்டியே மரணத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் 8 சதவீதம் அதிகமாக உள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது மேற்கூறப்பட்ட இரண்டு நோய்கள் ஏற்படும் அபாயத்தை 27 மற்றும் 34 சதவீதம் அதிகமாக்குகிறது.இந்த ஆய்வானது, வயது, உடற்பயிற்சி நிலைகள், புகையிலை பயன்பாடு அல்லது ரத்த அழுத்தம் போன்ற எதையும் கணக்கில் எடுக்கப்படாமல் மேற்கொள்ளப்பட்டது.”இரண்டு நபர்கள் ஒரே மாதிரியான உணவு முறையை எடுத்துக்கொண்டு, அதில் முட்டைகள் எடுத்துக் கொள்வது மட்டும் வேறு மாதிரியாக இருந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது” என்கிறார் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து பிரிவின் இணை ஆசிரியர் நொரினா ஆலென்.முட்டைகள் எடுத்துக் கொள்வதற்கும், இதய நோய்க்கான அபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்பட்ட முந்தைய ஆய்வுடன் இந்த புதிய ஆய்வு முரண்படுகிறது.ஆனால், முந்தைய ஆய்வுகளில் குறைந்த வேறுபட்ட மாதிரிகளே இருந்தது என்றும், குறுகிய காலம் மட்டுமே அவர்கள் கண்காணிக்கப்பட்டார்கள் என்றும் ஆலென் கூறுகிறார்.எனினும், தங்கள் ஆய்வுகளில் சிறு தவறுகள் இருக்கலாம் என் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
இந்த ஆய்வை இணைந்து மேற்கொண்ட ஆலென், ஒரு வாரத்திற்கு மூன்று முட்டைகளுக்கு மேல் சாப்பிடக் கூடாது என்கிறார்.அதுவும், முட்டையின் வெள்ளைக்கருவை உண்ணுமாறு முட்டை பிரியர்களுக்கு அவர் பரிந்துரைக்கிறார்.”முட்டை சாப்பிடுவதை முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் என்று நான் கூறவில்லை. சரியான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.”இந்த ஆய்வு அமெரிக்கர்களை வைத்து எடுக்கப்பட்டது என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது.
உலகில் அதிகம் முட்டைகள் எடுத்துக் கொள்ளும் நாடுகள்(Source: சர்வதேச முட்டை ஆணையம், 2015) நாடுகள் தனிநபர்கள்முட்டை எடுத்துக் கொள்ளும் அளவு, மெக்ஸிகோ 352,
மலேஷியா 342, ஜப்பான் 329, ரஷ்யா 285, அர்ஜெண்டினா 256, சீனா 254.8, அமெரிக்கா 252, டென்மார்க் 245,அதிகம் முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஒருவர் 252 முட்டைகளை எடுத்துக் கொள்கிறார்