மனைவி மற்றும் மருமகள் பெயர்களுக்கு மாற்றப்படும் சொத்துகளுக்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யும்படி, மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
”பெண்களுக்கு, நெருங்கிய உறவுகளிடம் இருந்து வழக்கப்படும் பரிசுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக, நிதி அமைச்சகத்தில், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதா,” என, மதச் சார்பற்ற ஜனதா தள உறுப்பினர் குபேந்திர ரெட்டி, ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர், வீரேந்திர குமார் கூறியதாவது: தனிப்பட்ட நபர்களிடம் இருந்து, தங்கள் மனைவி மற்றும் மருமகள்களுக்கு வழங்கப்படும் சொத்துகள் மீது வரி விலக்கு அளிக்கும் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக, நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மீதான முடிவு, பட்ஜெட் நேரத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.