பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலும், முதலீடுகளை அதிகரிக்கும் விதமாகவும் மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இனி எரிபொருள் சந்தையில் ஆயில் நிறுவனங்கள் தவிர புதியவர்களும் ஈடுபட இந்த அறிக்கை வழி வகுக்கும் என்றும், பெட்ரோல், டீசல் துறையில் வர்த்தகத்தில் ஈடுபட ஒரு நிறுவனம் 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்திய ஒரு விதியை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலம் இனி எரிபொருள் சந்தையில் சில்லறை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இனி ரூ.250 கோடி போதும் இனி புதிதாக அங்கீகாரம் பெற விரும்பும் நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் வைத்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் படி இனி அதானி, சவுதி அராம்கோ மற்றும் சூப்பர் மார்கெட்களில் கூட ஆட்டோமொபைல் எரிபொருள் விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களைத் திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையகங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நிபந்தனைகள் உண்டு எனினும் இவ்வாறு முதலீடுகள் குறைக்கப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் அங்கீகாரம் வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் அறிவிக்கப்பட்ட தொலைதூரப் பகுதிகளில் குறைந்த பட்சம் 5 சதவிகித சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பது போன்ற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், இதனை கண்கானிக்க ஒரு சிறப்பு வழிமுறை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 17 ஆண்டுகளாகவே இந்த எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான கொள்கையில் எந்த மாற்றமும் இதுவரை இல்லை. இதனால் சந்தையை ஊக்குவிக்கும் விதமாகவும், முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும், குறிப்பாக தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், மேலும் இதில் அன்னிய முதலீடுகளும் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்து வரும் நுகர்வு எனினும் கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் நுகர்வு குறைந்து வருகிறது என்றும், குறிப்பாக கடந்த 2017 – 2018ல் 26 மில்லியன் டன் பெட்ரோலும், 81 மில்லியன் டன் டீசலும் நுகரப்பட்டுள்ளது என்றும், இதே 2018 – 2019ல் 28 மில்லியன் டன் பெட்ரோலும், 84 மில்லியன் டன் டீசலும், இதே ஏப்ரல் – செப்டம்பர் 2019ல் 15 மில்லியன் டன் பெட்ரோலும், 41 மில்லியன் டன் டீசலும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை எத்தனை விற்பனையகங்கள் ? இதே சில்லறை எண்ணெய் வழங்கல் நிறுவனங்களின் சில்லறை வர்த்தகத்தை பொறுத்த வரை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 27,702 சில்லறை விற்பனை நிலையங்களும், இதே பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு 14,803 சில்லறை விற்பனை நிறுவனங்களும், இதே ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கும் 15,440 சில்லறை விற்பனையகங்களும், இதே ஷெல் நிறுவனத்திற்கு 145 விற்பனையகங்களும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 1,400 விற்பனையகங்களும், இதே மற்ற நிறுவங்களுக்கு 7ம் உள்ளதாகவும்,, ஆக மொத்தம் 64,625 சில்லறை விற்பனையகங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது