மத்திய பிரதேசத்தில் வருகிற 28-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசார பணிகளில் பல்வேறு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று நடந்த பிரசார பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, கரையான்களை ஒழிக்க நச்சு மருந்தினை நாம் பயன்படுத்துகிறோம்.
நாட்டில் ஊழலை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கசப்பு மருந்து போன்று பயன்படுத்தினேன். தங்களது படுக்கை அடியில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் மக்கள் பணம் பதுக்கி வைத்தனர். அவர்கள் இன்று ஒவ்வொரு பணத்திற்கும் வரி கட்டி வருகின்றனர். இந்த பணத்தினை சாதாரண மக்களுக்கான சரியான திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தி வருகிறோம் என்று கூறினார். மத்திய பிரதேச விவசாயிகள் காங்கிரசின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்ப வேண்டாம் என்று பிரதமர் மோடி கூறினார். அது போலியானது.
கர்நாடகாவில் சட்டசபை தேர்தலுக்கு முன் கடன் தள்ளுபடி வாக்குறுதியை காங்கிரஸ் அளித்தது. ஆனால் அதற்கு பதிலாக விவசாயிகளை சிறைக்கு அனுப்ப தயாராகி கொண்டு இருக்கிறது. எனது அரசு விவசாயிகளின் வருவாயை வருகிற 2022ம் ஆண்டிற்குள் இரட்டிப்படைய செய்ய வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். பிரதான் மந்திரி யோஜானா திட்டத்தின்கீழ் எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் இதுவரை 14 கோடி மக்களுக்கு வங்கி கடன் அளிக்கப்பட்டுள்ளது எனவும் மோடி குறிப்பிட்டார்.