பல் மருத்துவத்தில் ஆசியா அளவில் ராஜன் பல் மருத்துவமனை சாதனை !

ராஜஸ்தானை சேர்ந்த 5 வயது சிறுவன் சமக்ஸ்க்கு இ.டி.எனப்படும் எக்டோடெர்மல் டிஸ்ப்ளஷ்யா எனும் பாதிப்பு இருந்தது . அதன் காரணமாக சிறுவனுக்கு கீழ்த்தாடையில் பற்களே இல்லாமலும், மேல் தாடையில் இரண்டே பற்கள் மட்டுமே இருந்தன. ராஜஸ்தானில் சிறுவனுக்கு கழற்றி மாட்டக்கூடிய பல்செட் கொடுக்கப்பட்டது. ஆனால் கீழ்த்தாடை வெறுமையாக இருந்ததால், பல்செட்டை பொருத்தி பயன்படுத்த முடியவில்லை. அதனால் போதுமான உணவு சாப்பிட முடியாமல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. மேலும், மற்ற குழந்தைகளுடன் இயல்பாக பழகமுடியாத தாழ்வு மனப்பான்மையால் சிறுவனும் அவனது பெற்றோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் இந்த பிரச்னைக்கு, டைட்டானியம் டென்டல் இம்ப்ளான்ட் பொருத்துவது மட்டும்தான் ஒரே சிறந்த தீர்வாக கருதப்படுகிறது .

இந்த சிகிச்சை முறை குறித்து மைலாப்பூர் ராஜன் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குணசீலன் ராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது:

ஆசியாவில் முதலாவதாக மிகக்குறைந்த வயதில் இம்ப்ளான்ட் சிகிச்சை பெற்றவர் சிறுவன் சமக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் 10 க்கும் குறைவானவர்களே 5 வயது அல்லது அதற்கும் குறைவான வயதில் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.இந்த அதிநவீன சிகிச்சையானது நோயாளிக்கு உணவூட்டம் கொடுப்பதுடன் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது . சிறுவனுக்கு நாங்கள் இரண்டு அதிநவீன பல் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். சிறுவனுக்கு ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து டைட்டானியம் மற்றும் ஸிர்கோனியா ( ஸ்விட்சர்லாந்தின் ஸ்ட்ராமன் ரோக்ஸோல்டு இம்ப்ளான்ட் ) இம்ப்ளான்ட் கீழ்த்தாடையில் பொருத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாடை குணம் அடைந்தவுடன், அந்த இம்ப்ளான்ட் மீது அசையாத பல் செட் பொருத்தப்படும். மிகுந்த சிரமத்தில் இருந்த சிறுவனுக்கு இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டதில் ராஜன் பல் மருத்துவமனை மிகுந்த பெருமை கொள்கிறது .