பத்திரிகைகளின் பி.டி.எப்.களை அனுப்புவோர் மீது நடவடிக்கை ?

பெரும்பாலானோருடைய காலை நேரம், நாளிதழ்களுடன்தான் துவங்கும். காலத்துக்கு ஏற்ப, நாளிதழ்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இ – பேப்பர், ஆன்லைன் மூலமாக பத்திரிகைகளை, செய்திகளை பார்க்கும் வசதி, வாசகர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்து மொழிப் பத்திரிகைகளும், இந்த மாற்றங்களை செய்து, உடனடி செய்திகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், பி.டி.எப்., எனப்படும் கையடக்க ஆவண முறையில், பத்திரிகைகள் உலா வருகின்றன. அதாவது, பத்திரிகைகளை, ‘போட்டோ’ எடுத்து அல்லது பக்கத்தை அப்படியே, ‘டவுன்லோடு’ செய்து, பகிர்ந்து கொள்வதாகும்.இந்த சட்ட விரோத பகிர்வு, சமூக வலை தளங்களில் நடந்து வருகிறது.

‘கொரோனா’ வைரஸ் பரவல் காலத்தில், இவ்வாறு பத்திரிகைகளின் பி.டி.எப்., பகிர்ந்து கொள்வது அதிகரித்தது. பத்திரிகைகளை வாங்குவதால், வைரஸ் தொற்றி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர்.’பத்திரிகைகளால் வைரஸ் பரவாது; அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்புடன்தான், பத்திரிகைகள் வீடுகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என, பத்திரிகை நிறுவனங்கள் தெரிவித்தன.

அதற்காகவே, பத்திரிகைகளை அச்சடிக்கும் இயந்திரத்தில் வைத்தே துாய்மைப்படுத்தி, ‘பேக்’ செய்து, சப்ளை செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தின; அறிவியல் பூர்வமாகவும், இது நிரூபிக்கப்பட்டது.ஆனாலும், ‘வாட்ஸ்ஆப்’ சமூக வலைதளத்தில், பத்திரிகைகளின், பி.டி.எப்.,களை சட்டவிரோதமாக பகிர்ந்து கொள்வது தற்போதும் தொடர்கிறது. இது சட்டவிரோதமானது, சட்ட நடவடிக்கைகள் பாயும் என்ற எச்சரிக்கையை மீறி, இந்த பகிர்வு நடந்து வருகிறது. சட்டவிரோதம் என்பது ஒருபுறம் இருக்க, இதில் பல ஆபத்துகளும் மறைந்துள்ளதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.
பத்திரிகைகளின் அனுமதி பெறாமல், இவ்வாறு பத்திரிகைகளை பகிர்வோர், அதில், திருத்தங்கள் செய்யும் ஆபத்தும் உள்ளது.அதனால், உண்மையான செய்திகளையும் பொய் செய்திகளாக திரித்துக் கூற வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட செய்தியின் நம்பகத்தன்மை, உண்மை தன்மையை மறைக்கவும் வாய்ப்புள்ளது.பத்திரிகைகளின் வருவாய் பாதிக்கப்படுகிறது என்பதைவிட, மக்களுக்கு உள்ளதை உள்ளபடியே அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளின் தர்மத்துக்கு எதிராக இது அமைந்துவிடும் ஆபத்து உள்ளது.

‘இது, உண்மை செய்திகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும்’ என, கடுமையாக உழைக்கும் பத்திரிகையாளர்களின் வேள்வியையும் கேள்விக்குறியாக்கி விடுகிறது.அதனால், இதுபோன்று பத்திரிகைகளை, ‘போட்டோ’ எடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். அனுப்புவது சட்டவிரோதம் என்பதுபோல், அதை பார்ப்பதும், மற்றவர்களுக்கு பகிர்வதும் சட்டவிரோதமே.
‘இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்து, அதை தடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசுக்கு உண்டு. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, பத்திரிகைகளின், பி.டி.எப்.,களை அனுப்புவோர் மீது, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என, சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.