நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்? மத்திய அரசுஅதிரடி !

வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க நகரங்களில் உள்ள வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பது கட்டாயம்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. அதுபோல ‘அந்தந்த பகுதி உள்ளாட்சி நிர்வாகங்கள் குறைந்தபட்சம் ஒரு நீர் நிலையையாவது முறையாக பராமரிக்க வேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் இந்த ஆண்டு கோடை முடிந்த பின்னரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த ஆண்டு குடிநீருக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாமல் குறைந்தது தான் இதற்கு காரணம். அதே நேரம் பெய்த மழை நீரை பாதுகாக்கத் தவறியதும் தண்ணீர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதுபோல 2001ம் ஆண்டில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கட்டாய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கிடப்பில் போட்டதும் இப்போது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘மழை நீரை சேகரிக்க வேண்டும்; நீர் நிலைகளை முறையாக பராமரிக்க வேண்டும்’ என்பதற்காக நமது நாளிதழ் சிறப்பு கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதற்காக ‘களமிறங்குவோம்… நமக்கு நாமே’ என நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
‘நகர்ப்புறங்களில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்; மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை கண்காணித்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது; இதற்கான விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.
* புதிய வீடுகள் கட்ட அனுமதி அளிக்கும் போது அந்த கட்டடத்தில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் இருப்பதை கட்டாயமாக்க வேண்டும்
* புதிய கட்டடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறையானது தானா என சோதனையிட்டு உறுதி செய்ய வேண்டும்
* மழை நீர் சேகரிப்பு கண்காணிப்பு பிரிவு என்ற சிறப்பு பிரிவை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்படுத்த வேண்டும்.

அந்த பிரிவு நிலத்தடி நீர்மட்டத்தை ஆராய்ந்து நிலத்தடி நீரை இஷ்டத்திற்கு உறிஞ்சுவதை தடுக்க வேண்டும்
* அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு நீர் நிலையையாவது முறையாக பராமரிக்க வேண்டும். அந்த நீர் நிலை அந்தப் பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
முக்கியமாக இஷ்டத்திற்கு கான்கிரீட் போட்டு தரையை மூடும் செயலை கைவிட வேண்டும் எனவும் மத்திய வலியுறுத்தியுள்ளது. அதாவது தேவைப்படும் இடங்களில் மட்டும் தான் சாலை அல்லது நடைபாதைகளில் கான்கிரீட் போட வேண்டும்; பிற இடங்களில் கூடாது. ‘இதனால் நிலத்தடி நீர் சேர்வதோடு மழைக் காலங்களில் நீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்’ என மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த விதிமுறைகள் மத்திய அரசின் ‘ஜல்சக்தி அபியான்’ எனப்படும் நீர்வளத்துறை திட்டத்தின் முதல் கட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட பணிகள் இம்மாதம் 1ம் தேதி துவங்கி செப்டம்பர் 15ல் முடிவடைகிறது. அதன்பின் இரண்டாம் கட்ட பணிகள் அக்டோபர் 1ல் துவங்கி நவம்பர் 30ல் நிறைவடையும். பிரதமர் மோடியும் கடந்த வாரம் ‘மன் கீ பாத்’ எனப்படும் ‘மனதின் குரல்’ என்ற தன் உரையில் மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் நிலைகள் பராமரிப்பிற்கு முக்கியத்துவம் அளித்திருந்தார்.

‘நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் போதிய பருவ மழை இல்லை’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை கடந்த மாதம் துவங்கிய போது 33 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மழை பற்றாக்குறை தற்போது வட மாநிலங்களில் மழை பரவலாக பெய்து வருவதால் 21 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளதாவது:
* நாட்டின் 91 முக்கிய அணைகளில் 62ல் 80 சதவீதம் அல்லது அதற்கும் கீழ் தான் தண்ணீர் உள்ளது
* வானிலை ஆய்வு மையம் பிரித்துள்ள 36 துணை கோட்டங்களில் 24ல் குறைந்த அளவிலேயே மழை பெய்துள்ளது
* இந்த பற்றாக்குறை அளவு கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் அதிகம் உள்ளது
* அதே நேரத்தில் கடந்த வாரம் நாட்டின் மத்திய பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருந்துள்ளது. இவ்வாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.