நிறைவேறியது அணைகள் பாதுகாப்புச் சட்டம் பறிபோகுமா பெரியாறு 999 ஆண்டு உரிமை?

124 ஆண்டு தமிழக உரிமை, தேசிய ஆணையத்துக்கு மாறுகிறது 142 அடி இனி தேக்க முடியுமா; 152க்கு உயர்த்த முடியுமா?மதுரை: மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி விட்டதால், பெரியாறு அணையில் 999 ஆண்டு ஒப்பந்தப்படியான பல உரிமைகளை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த அணை 124 ஆண்டுக்குப் பிறகு தேசிய ஆணைய கட்டுப்பாட்டுக்கு மாறுவதால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இனி 142 அடி வரை தேக்க முடியுமா, அடுத்து 152 அடி தேக்கும் கனவு என்னாகும் என்ற கேள்விகள் பூதாகரமாக எழுந்துள்ளன. ‘அணைகள் பாதுகாப்பு மசோதா’ 1987ல் மத்திய அரசு கொண்டு வந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கிடப்பில் போடப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்தபோது, மாநிலங்களின் எதிர்ப்பை தொடர்ந்து, மக்களவை நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. இதில் மாநில விருப்பத்தை கேட்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.மீண்டும் இந்த மசோதா 2016ல் அறிவிக்கப் பட்டபோது தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. இதன்பிறகு 2018ல் மீண்டும் மசோதாவில் திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதில் மாநில விருப்பங்களை கேட்கும் உரிமை அளிக்கப்படவில்லை. இதை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நடைபெற்றதால், அந்த சட்டம் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப் பட்டது.கடந்த மே மாதம் மக்களவை தேர்தல் முடிந்ததும், இந்த மசோதாவை மீண்டும் கையில் எடுத்து மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. 2 நாட்களுக்கு முன் மக்களவை யில் அணைகள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டத்திலுள்ள சில ஷரத்துக்களால் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு பெரும் பாதகம் ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. சட்ட ஷரத்துக்கள் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளுக்கு குழிபறிக்கும் வகையில் அமைந்துள்ளது. சென்னை மாகாணம், திருவாங்கூர் சமஸ்தானம் இடையே 1867ல் 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து, ஆங்கிலப் பொறியாளர் பென்னிகுக் 1889ல் தொடங்கி 1895ல் அணையை கட்டி முடித்தார். கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை தமிழக அரசுக்கு சொந்தமானதாகும். அணை பராமரிப்பு மற்றும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முழு உரிமையும் தமிழகத்துக்கே உள்ளது.

கேரளாவின் அபாண்ட புகாரினால் 1979 முதல் 2014 வரை 35 ஆண்டுகள் 136 அடி வரை மட்டுமே தேக்கப்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2014ல் அளித்த தீர்ப்பில் முதற்கட்டமாக 142 அடி தேக்கலாம், அடுத்து பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தேக்கலாம் என தீர்ப்பளித்து, கேரள அணை பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்தது. பெரியாறு அணை, தேசிய ஆணைய கட்டுப்பாட்டுக்கு மாறினால், தமிழக அரசு முடிவு எடுக்கும் அதிகாரம் பறி போய் விடுகிறது. அந்த ஆணையத்தில் கேரளா வெள்ள அபாயம் என்று அபாண்டமாக புகார் கூறினால், முன்கூட்டியே தண்ணீரை திறக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே 142 அடி வரை தேக்க தேசிய ஆணையம் அனுமதித்தால்தான் முடியும்.

அடுத்து 152 அடி தேக்குவதற்கு, பேபி அணையை பலப்படுத்தும் பணிக்கு தேசிய ஆணையம் அனுமதி தேவை என்பதால், அந்த கனவு என்னாகும்? பாதுகாப்பு என்ற பெயரில் கலைந்து போகுமோ என்ற அச்சம் எழுகிறது. தமிழக பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘1895 முதல் தமிழகத்தின் பொறுப்பில் இருக்கிறது. 124 ஆண்டுகள் கழித்து தேசிய ஆணைய கட்டுப்பாட்டுக்கு மாறுகிறது. இதனால் அணையில் தமிழகத்தின் பிடி தளர்ந்து போகும். தேசிய ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு வரும்போது தான் முழு விபரத்தை அறிய முடியும்’’ என்றனர்.