துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், ‘சோலார்’ எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மின் வாரியம், முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.மின் வாரியத்திற்கு சொந்தமாக, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள, காலி இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்து வருகிறது.தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி துணை மின் நிலையத்தில், 50 கிலோ வாட்; அதே மாவட்டம், கரிமங்கலம் துணை மின் நிலையத்தில், 18 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மத்திய அலுவலகத்தில், 30 கி.வாட்; ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் செயற்பொறியாளர் அலுவலகங்களில், தலா, 10 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.