திவால் சட்டம் அமலுக்கு வந்த பின் வாராக் கடன்களுக்கு தீர்வு!

திவால் சட்டம் அமலுக்கு வந்த பின், வங்கிகள், நிதி நிறுவனங்களின் வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர், இன்ஜெட்டி சீனிவாஸ் கூறியதாவது:கடந்த, 2016ல் நிறுவன திவால் சட்டம் அறிமுகமான பின், வாராக் கடன்களுக்கு தீர்வு காண்பது அதிகரித்துள்ளது.

அதேசமயம், வாராக் கடன் வசூலுக்கு, திவால் சட்டத்தின் கீழ், கடைசி கட்டமாகத் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதாவது, முதலில் கடன்களுக்கான பல்வேறு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் முடிவு காண முடியாத பட்சத்தில், திவால் சட்டத்தை நாடலாம்.புதிய வாராக்கடன்கள் பெருகுவது குறைந்துள்ளது. அதேசமயம், ஒட்டுமொத்த வாராக் கடன் அளவும் குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நல்ல முன்னேற்றம்.திவால் சட்டத்தின் கீழ், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், ஒரு வாராக்கடன் வழக்கில் தீர்வு காணப்பட்டால், தீர்ப்பாயத்திற்கு வெளியே, ஒன்பது வழக்குகளுக்கு தீர்வு கிடைப்பதாக, புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

திவால் சட்டம்அமலுக்கு வருவதற்கு முன், நலிவுற்ற நிறுவனங்களின் கடன் மீட்பு பணிகள் முடிவடைய, குறைந்தது நான்கு ஆண்டுகளாகின. இந்த நடவடிக்கையின் போது, அந்நிறுவன
சொத்துகளை பராமரிக்க, 9 – -10 சதவீதம் செலவானது. மேலும், வாராக் கடன் மீட்பு, 25- – 26 சதவீத அளவிற்கே இருந்தது.திவால் சட்டம் அறிமுகத்திற்கு பின், கடந்த இரண்டு ஆண்டுகளில், 80 சதவீத வழக்குகளில், வாராக்கடன் வசூல், 48 சதவீதமாக உயர்ந்துள்ளது.திவால் நடவடிக்கை செலவினம், 1 சதவீதமாக குறைந்துள்ளது.இந்த வகையில், இரண்டு ஆண்டுகளில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடன்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.