மதுரையில் பரோட்டா கடை வைத்திருப்பவர் ஆகாசவீரன் (விஜய் சேதுபதி). பக்கத்து ஊரைச் சேர்ந்த பேரரசியுடன் (நித்யா மேனன்) ஆகாசவீரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. காதலிக்கத் தொடங்கும் இருவரும் மனதளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஆனால் ஹீரோவின் பின்னணியை தெரிந்துகொள்ளும் ஹீரோயின் குடும்பத்தினர் இந்த வரன் வேண்டாம் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் நாயகியை திருமணம் செய்தால் ஹீரோவின் பெற்றோர் எதிர்காலத்தில் மருமகளால் ஒதுக்கப்படுவார்கள் என்று ஜோசியக்காரர் சொல்வதை கேட்டு இந்த திருமணத்தை நிறுத்த நினைக்கின்றது ஹீரோ குடும்பம்.
ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பையும் தாண்டி ஹீரோயினை தன் வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்கிறார் ஹீரோ. நன்றாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார் – மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை என ஆரம்பிக்கும் விரிசல் போகப் போக பெரிதாகி ஒரு கட்டத்தில் கணவன் – மனைவி இருவரும் பிரியும் நிலைக்கு வந்துவிடுகிறது. இருவரும் மீண்டும் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை அலசுகிறது ‘தலைவன் தலைவி’.
தனது முந்தைய படங்களில் உறவுகளின் புனிதம், குடும்பத்தின் பெருமை ஆகியற்றை பேசிய இயக்குனர் பாண்டிராஜ், அதே உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், சொந்தக்காரர்கள் என்ற பெயரில் உண்டாக்கும் பிரச்சினைகளை இதில் பேசியதன் மூலம் முந்தைய படங்களில் தான் காட்டிய அற்புதங்களை தானே உடைத்துள்ளார். கணவன் – மனைவிக்கு நடுவே ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகள் கூட சுற்றி இருப்பவர்களால் எப்படி பூதாகரமாகிறது என்பதை படம் முழுக்க கலகலப்பாக சொல்லி இருக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய ப்ளஸ், அதன் நடிகர்கள். விஜய் சேதுபதி – நித்யா மேனனை சுற்றி நடக்கும் கதை என்பதால் இருவருக்குமே சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது.ஆனால் விஜய் சேதுபதிக்கு சவால் விடும்படியான நடிப்பைக் கொடுத்து அசத்தி விட்டார் நடிகை நித்யா மேனன். பேரரசி என்ற கதாபாத்திரத்தில் தோன்றி அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார் நித்யா மேனன். கோபம், அன்பு, காதல், அழுகை என அனைத்திலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார் நித்யா மேனன். விஜய் சேதுபதியும் ஹீரோயிசத்துக்கு வாய்ப்பிருந்த காட்சிகளில் கூட அதை தவிர்த்திருப்பதன் மூலம் மீண்டும் ஒருமுறை தனித்து நிற்கிறார். இந்த இருவருக்கும் அடுத்தபடியாக படம் முழுக்க நடிப்பில் கொடி கட்டிப் பறக்கிறார் ஹீரோவின் அம்மாவாக வரும் தீபா சங்கர். இந்த கதாபாத்திரம் அவருக்கு தமிழில் பல வாய்ப்புகளைகளை ஏற்படுத்தித் தரும்.
’பாரதி கண்ணம்மா’ ரோஷினிக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை நிறைவாக செய்திருக்கிறார். சரவணன், செம்பன் வினோத், ஜானகி சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, யோகி பாபு என படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக, பரோட்டாவை படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக காட்டியிருப்பது ரசிக்கும்படி இருந்தது. படத்தின் ஆரம்ப காட்சிகள் பரோட்டா பிரியர்களை வாயில் எச்சில் ஊற வைக்கும் படி இருந்தது.குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் கணவன் – மனைவி பிரச்சனைகளை திரையில் கண்டால் குடும்பமாக சென்று பார்ப்பவர்களுக்கு “அட இது நம்ம கதை தான்…” என்று கூறும் அளவிற்கு திரைக்கதையை திறமையாக கையாண்டு அருமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
