தமிழ்நாட்டில், 46% பேர் தங்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள்

இந்திய இதய ஆய்வு [India Heart Study (I.H.S)], தங்களது ஆய்வில் தமிழ்நாட்டிலில் இருந்து கலந்து கொண்டவர்களில் 46% பேர் தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை அல்லது ஹைபர்டென்ஷன் இருப்பது குறித்து அறியாமல் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறது. இந்த ஆய்வு 2293 பேர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம்..

· ஆய்வில் பங்குப்பெற்ற 25.1% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதும், ஆனால் அவர்கள் அது குறித்து அறிந்திருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

· 20.8% பேருக்கு மருத்துவச் சூழல் இல்லாத, வழக்கமான சூழலில் பரிசோதிக்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் [masked hypertension] இருப்பது தெரிய வந்திருக்கிறது.

· 20.2% பேருக்கு மருத்துவ சூழலில் பரிசோதிக்கப்பட்ட போது உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

· 33.90% பேர் இயல்பான ரத்த அழுத்த நிலையில் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது.

இந்திய இதய ஆய்வு (I.H.S)-ன் முடிவுகளின்படி, இந்தியர்கள் மத்தியில் மருத்துவ சூழல் இல்லாத வழக்கமான சூழலில் கண்டறியப்படும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மருத்துவச் சூழலில் கண்டறியப்படும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் முதல் முறையாக மருத்துவமனைக்கு செல்லும் போது, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகை உயர் ரத்த அழுத்தம் இருப்பதற்கான வாய்ப்புகள் 42% இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்தியர்களின் இயல்பான இதயத்துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 80 முறை துடிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது இதயம் ஒரு நிமிடத்திற்கு வழக்கமாக துடிக்கும் 72 முறையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆய்வில் மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், இந்தியர்களுக்கு காலையில் இருப்பதை விட மாலை நேரங்களில் அதிக இரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதனால் இந்த ஆய்வு முடிவு, உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நேரத்தை மறுபரிசீலனை செய்ய வழிகாட்டுவதாக அமைந்திருக்கிறது.

மருத்துவச் சூழலில் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும் போது, இயல்பாக இருப்பதைவிட கொஞ்சம் அதிகம் இருப்பதாக, தவறாக அறியப்படும் உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு [White-coat hypertensives] தேவையில்லாமல் மருந்து [anti-hypertensives] உட்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது. இது அவர்களை குறைந்த ரத்த அழுத்த பிரச்னைக்குள் [90/60 விட குறைவு] தள்ளிவிடும் அபாயத்திற்கும் வழிவகுக்கக்கூடும். அதேநேரம், மருத்துவச்சூழல் இல்லாமல் கண்டறியப்படும் உயர் ரத்த அழுத்தம், இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றில் உண்டாகும் சிக்கல்களை கண்டறிய முடியாமல் போக செய்யக்கூடும். இது அவர்களின் முன்கூட்டிய இறப்பிற்கும் காரணமாக அமையலாம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்..

இந்திய இதய ஆய்வின்[I.H.S] -ன் முதன்மை பரிசோதனையாளரும், BHMRC –ன் அகடமிக்ஸ் & ரிசர்ச் பிரிவின் சேர்மன் மற்றும் டீன், இதயநோய் மருத்துவ நிபுணர் டாக்டர். உபேந்த்ரா கெளல் [Dr. Upendra Kaul, Cardiologist, Chairman and Dean Academics and Research of BHMRC] கூறுகையில், “இந்தியாவில் உயர் இரத்த அழுத்த ஆய்வு மற்றும் மருத்துவத்திற்கு சிறப்பான மருத்துவ மேலாண்மை மிக மிக அவசியம் என்பதை இந்திய இதய ஆய்வறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இது இந்தியாவை மட்டும் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தரவுகளாகும். அதனால், இந்த ஆய்வறிக்கை இந்தியர்களிடையே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிவதற்கான சிறந்த நடைமுறைகளை சிறப்பான முறையில் வடிவமைக்க உதவும். மேலும், உயர் இரத்த அழுத்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த முழுமையான தரவை இந்த ஆய்வறிக்கை முன்வைக்கிறது.” என்றார்.